குடியிருப்பில் சுற்றிய சிங்கம்: தேடுதல் வேட்டையில் காத்திருந்த டுவிஸ்ட்

சிங்கம் நடமாடுவது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகின.
lion
Published on: 
Summary

இஸ்தான்புல் நகரில் சுற்றித் திரிந்த பெண் சிங்கத்தை தேடும் வேட்டையில் அதிகாரிகளின் முடிவு ஆச்சரியம் அளித்தது.

துருக்கியின் இஸ்தான்புல் நகரின் புறநகர்ப் பகுதியில் பெண் சிங்கம் ஒன்று சுற்றித் திரிவதாக செய்திகள் வெளியாகின.

கடந்த 22-ம் தேதி மாலை இஸ்தான்புல்லின் வடக்கே உள்ள சாரியர் மாவட்டத்தின் உஸ்கும்ருகோய் குடியிருப்புப் பகுதியில் சிங்கம் போன்ற ஒரு விலங்கு நடமாடுவதாக சிசிடிவி காட்சிகள் வெளியாகின.

இதையடுத்து, அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கப்பட்டனர்.

அருகிலுள்ள பெல்கிரேட் காடு மூடப்பட்டு, 70-க்கும் மேற்பட்ட போலீசார், ராணுவ கமாண்டோக்கள் மற்றும் வனவிலங்கு நிபுணர்கள் களமிறங்கினர். டிரோன்கள் மூலம் தீவிரமாகத் தேடுதல் வேட்டை நடந்தது.

வசதி படைத்தவர்கள் வீடுகளில் சட்டவிரோதமாக வளர்த்த சிங்கம் தப்பித்திருக்கலாம் என்ற சந்தேகத்துடன், அதன் உரிமையாளரைக் கண்டறிய அரசு வழக்கறிஞர் அலுவலகம் விசாரணையையும் தொடங்கியது.

இந்நிலையில், சுமார் 24 மணி நேர தேடுதல் வேட்டைக்குப் பிறகு, இஸ்தான்புல் ஆளுநர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அந்த அறிக்கையில், வெவ்வேறு கோணங்களில் எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் அது சிங்கமோ அல்லது வேறு எந்த பெரிய பூனை இனத்தைச் சேர்ந்த விலங்கோ இல்லை என்பது உறுதியானது என தெரிவித்துள்ளது.

சிங்கம் என நினைத்துத் தேடப்பட்ட அந்த விலங்கு ஒரு பெரிய நாயாக இருக்கலாம் எனப் பலரும் கருதுகின்றனர்.

இதைத்தொடர்ந்து வீட்டுப் பூனைகளின் வீடியோக்களைப் பதிவிட்டு, இதுதான் அந்தச் சிங்கமா? என சமூக வலைதள பயனர்கள் நகைச்சுவையாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

X