குளித்துவிட்டு பேரீச்சம்பழம் சாப்பிட்ட கொலையாளிகள்.. வங்கதேசத்தில் இந்து குடும்பம் கொல்லப்பட்டதன் திடுக்கிடும் பின்னணி

கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த 12 வயது சிறுவன் பிரியத்தையும் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர்.
கொல்லப்பட்டவர்கள்
கொல்லப்பட்டவர்கள்
Published on

வங்கதேசத்தின் ரங்பூர் நகரில் உள்ள தாஸ்பாறா பகுதியில் ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர் கணபதி சக்ரவர்த்தி (65), அவரின் மனைவி பிரிதிலதா சக்ரவர்த்தி (50), மகள் அகாமி சக்ரவர்த்தி (23), மகன் பிரியம் சக்ரவர்த்தி (12) ஆகியோர் கடந்த வாரம் அவர்களின் பூட்டிய வீட்டில் சடலமாக கிடந்தனர்.

கண்டெடுப்பு

கடந்த வியாழக்கிழமை முதல் குடும்பத்தினரின் போன்கள் அனைத்தும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால், சனிக்கிழமை இரவு உறவினர்கள் வந்து பார்த்தபோது வீடு பூட்டப்பட்டிருந்தது.

காவல்துறையினர் வந்து பூட்டை உடைத்து உள்ளே சென்றபோது தாயும் மகளும் படிக்கட்டுகளிலும், தந்தை கணபதியின் சடலம் மொட்டை மாடியிலும், 12 வயது சிறுவனின் சடலம் கட்டிலுக்கு அடியிலும் கண்டெடுக்கப்பட்டன.

அவர்கள் அனைவரும் கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டது.

உடல்களை கைப்பற்றி, வழக்குப்பதிவு செய்த வங்கதேச போலீசார் விசாரித்த நிலையில் இது கொலை என தெரியவந்துள்ளது.

கொலை

முக்தா மற்றும் சித்தார்த்தா என அடையாளங் காணப்பட்ட குற்றவாளிகள் வியாழன் நள்ளிரவுக்கும் வெள்ளி அதிகாலைக்கும் இடையே இந்த படுகொலைகளைச் செய்துள்ளனர்.

கொலையை செய்த பிறகு, குற்றவாளிகள் அங்கேயே குளித்துவிட்டு, பிரிட்ஜில் இருந்த பேரீச்சம்பழம் மற்றும் வெள்ளரிக்காய்களை சாப்பிட்டுள்ளனர். பின்னர் 'யாபா' என்ற போதைப்பொருளையும் உட்கொண்டுள்ளனர்.

அலமாரிகளைத் திறந்து ஆடைகளை களைத்து நாலாபுறமும் வீசிவிட்டு தங்க நகைகளை திருடியுள்ளனர்.

வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகை நேரத்தில் வீதிகள் காலியாக இருந்தபோது இவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

அதிரவைக்கும் காரணம்

சம்பவத்தன்று இரவு, சந்தேக நபர்களான முக்தா தாஸ் மற்றும் சித்தார்த்தா தாஸ் ஆகிய இருவரும் கணபதி சக்ரவர்த்தியின் வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்து 'யாபா' போதை பொருளை உட்கொண்டதாக கூறப்படுகிறது.

இதை கவனித்த கணபதி சக்ரவர்த்தி மொட்டை மாடிக்கு சென்று, தனது வீட்டின் மாடியில் போதைப்பொருள் பயன்படுத்துவதை தடுத்து கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த குற்றவாளிகள், முதலில் கணபதி சக்ரவர்த்தியின் கழுத்தை துண்டால் இறுக்கிக் கொன்றுள்ளனர்.

கணபதியின் முனகல் சத்தம் கேட்டு அவரைப் பார்க்க படிக்கட்டு வழியே மேலே வந்த மனைவி பிரிதிலதாவையும் அதேபோல் கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளனர்.

தொடர்ந்து தாயின் சத்தம் கேட்டு வந்த மகள் அகாமி சக்ரவர்த்தியையும் அவர்கள் படிக்கட்டிலேயே கொன்றனர்.

இறுதியில், தங்கள் குற்றம் வெளியே தெரிந்துவிடும் என்ற பயத்தில், கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த 12 வயது சிறுவன் பிரியத்தையும் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர்.

கொலைக்குப் பிறகு, வழக்கை திசைதிருப்பி கொள்ளை சம்பவமாக காட்டவே குற்றவாளிகள் அலமாரிகளை கலைத்து நாடகமாடியதும், தங்க நகைகளைக் கொள்ளையடித்து சென்றதும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரும் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு இவற்றை வாக்குமூலமாக அளித்துள்ளனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com