கென்யாவில் இரண்டாவது எபோலா பாதிப்பு உறுதி

அந்தந்த நாட்டு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கென்ய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Ebola Ward
Published on: 

காங்கோவில் இருந்து வந்த இரண்டு நாட்களில் உயிரிழந்த நபரின் உறவினர் ஒருவருக்கு, தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் எபோலா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கென்ய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.

39 வயதான அந்த நபர், கென்யாவின் முதல் எபோலா நோயாளிக்கு நெருங்கிய உறவினர் என்றும், அவருக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டன என்றும் அமைச்சகம் கூறியது.

முதல் நோயாளி, 40 வயதான கென்ய நாட்டைச் சேர்ந்தவர்; இவர் காங்கோவில் வசித்து வந்தபோது நோய்வாய்ப்பட்டு இரண்டு மருத்துவ மையங்களில் சிகிச்சை பெற்றார். அங்கிருந்து வெளியேறி அண்டை நாடான உகாண்டாவை அக்டோபர் 1-ஆம் தேதி அடைவதற்கு முன், எபோலா பாதிப்புள்ள மூன்று மாகாணங்கள் வழியாக அவர் பயணம் செய்திருந்தார்.

108 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்:

பின்னர் விமானம் மூலம் கென்யா வந்த அவரை, அவரது உறவினர் ஒருவர் விமான நிலையத்தில் அழைத்து சென்று மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பெற தொடங்கிய அவருக்கு அக்டோபர் 5-ஆம் தேதி எபோலா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது; அன்றைய தினமே அவர் உயிரிழந்தார்.

முதல் நோயாளியுடன் தொடர்பில் இருந்த சுமார் 128 பேரை சுகாதார அதிகாரிகள் அடையாளம் கண்டனர். அவர்களில் 108 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். இவர்களில் ஐந்து பேர் கென்யாவுக்கு வெளியே உள்ளனர். இது குறித்து அந்தந்த நாட்டு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கென்ய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எந்த ஆதாரமும் இல்லை:

தனிமைப்படுத்தப்பட்டவர்களில் இரண்டாவது நோயாளியும் ஒருவர். நோய்த்தொற்றை ஆரம்பத்திலேயே கண்டறிந்தது "அவர் குணமடைவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது" என்று சுகாதார அமைச்சகம் கூறியது.

இந்த இரண்டு பாதிப்புகளுக்கும் இடையே தொடர்பு இருப்பதாகவும், "சமூகத்தில் நோய் பரவியதற்கான எந்த ஆதாரமும் இல்லை" என்றும் அமைச்சகம் தெரிவித்தது.

கென்யாவில் முதல் எபோலா பாதிப்பு கண்டறியப்பட்டதில் இருந்து, எல்லை பகுதிகள் மற்றும் விமான நிலையங்களில் பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், சந்தேகிக்கும் வகையிலான தொற்று பாதிப்புகள் குறித்து அவசர உதவி எண் மூலம் தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com