

கடலை நோக்கி வட கொரியா ஏவுகணை சோதனை நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு வாரத்திற்கும் குறைவான காலத்தில் நிகழும் இரண்டாவது ஆயுத சோதனையாக இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. வட கொரியா புதன்கிழமை கடலை நோக்கி பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்றை ஏவியதாக ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சந்தேகத்திற்கிடமான ஆயுதம் கடலில் விழுந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. தென் கொரிய ராணுவத்தை மேற்கோள் காட்டி, வட கொரியா தனது கிழக்கு கடற்கரைக்கு அப்பால் அடையாளம் தெரியாத ஏவுகணை ஒன்றை சுட்டதாக யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
வட கொரிய அச்சுறுத்தல்களுக்கு எதிரான தயார்நிலையை வலுப்படுத்துவதற்காக, தென் கொரியாவும் அமெரிக்காவும் அடுத்த வாரம் தங்களின் வருடாந்திர பெரிய அளவிலான இராணுவ பயிற்சிகளை தொடங்கவுள்ளதாக அறிவித்த இரண்டு நாட்களுக்கு பிறகு, இந்த ஏவுகணை சோதனை நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உல்ச்சி ஃப்ரீடம் ஷீல்ட் என்று அழைக்கப்படும் இந்தப் பயிற்சிகள், வட கொரியாவிடம் இருந்து கடும் எதிர்ப்பை தூண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில், தம்மீது படையெடுப்பதற்கான ஒரு ஒத்திகையாகவே அந்நாடு இந்த பயிற்சியை கருதுகிறது.
இதற்கு முன்னர், தென்கொரியா-அமெரிக்காவின் முக்கிய இராணுவப் பயிற்சிகளுக்கு, வட கொரியா ஆத்திரமூட்டும் ஆயுத சோதனைகள் மற்றும் கடுமையான சொல்லாடல்கள் மூலம் பதிலளித்துள்ளது.
கடந்த வாரம், தென் கொரியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள், வட கொரியா ஏவிய குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணையை கண்டறிந்தன. இது ஜூன் மாத கடைசிக்கு பிறகு வட கொரியா மேற்கொண்ட முதல் பாலிஸ்டிக் ஆயுத சோதனை நடவடிக்கையாகும்.
வழக்கமாக ஆயுத சோதனைகள் குறித்த விவரங்களை ஒரு நாள் கழித்து வெளியிடும் வட கொரியா, இந்த ஏவுகணை ஏவப்பட்டதாகக் கூறப்படுவதை உறுதிப்படுத்தவில்லை.