

சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கண் பார்வை கணிசமாக மேம்பட்டுள்ளதாகவும், அவரது பார்வைத்திறன் "கிட்டத்தட்ட இயல்பு நிலைக்கு" திரும்பியுள்ளதாக சிறை அதிகாரிகள் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்தனர்.
இஸ்லாமாபாத்தில் உள்ள முன்னணி தனியார் மருத்துவமனையான 'ஷிஃபா இன்டர்நேஷனல்' மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக இம்ரான் கான் விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் விசாரிக்கவிருந்த நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது.
ஆகஸ்ட் 2023 முதல் சிறையில் உள்ள 'பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப்' (PTI) கட்சியின் நிறுவனர் இம்ரான் கான், ஜனவரி மாத இறுதியில் அவருக்கு வலது கண்ணில் 'சென்ட்ரல் ரெட்டினல் வெயின் அக்லூஷன்' (CRVO) எனும் கண் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதில் இருந்து, கண் சிகிச்சைக்காக இஸ்லாமாபாத்தில் உள்ள 'பாகிஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ்' (PIMS) மருத்துவமனைக்கு பலமுறை அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
ராவல்பிண்டியில் உள்ள அடியால சிறை அதிகாரிகள், 73 வயதான இம்ரான் கான் கண்களின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.
இம்ரான் கானின் மருத்துவ பிரச்சனை கண்டறியப்பட்டதில் இருந்து அவருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், PIMS மருத்துவமனையின் கண் மருத்துவ பிரிவுத் தலைவர் டாக்டர் முகமது ஆரிஃப் கான் மற்றும் ராவல்பிண்டியில் உள்ள அல்ஷிஃபா டிரஸ்ட் கண் மருத்துவமனையின் விட்ரியோ-ரெட்டினல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் நதீம் குரேஷி ஆகியோர் அவருக்கு சிகிச்சை அளித்ததாகவும் அந்த அறிக்கை தெரிவித்தது.
"இதன் விளைவாக, அவரது கண்ணில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்படுகிறது, மேலும் அவரது பார்வைத்திறன் கிட்டத்தட்ட இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது" என்று அந்த அறிக்கை கூறியது.
மருத்துவ சிகிச்சைகள் மற்றும் பார்வைத்திறனில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் ஆகியவை, கானுக்கு சிறந்த மருத்துவ வசதிகளை வழங்குவதில் சிறை நிர்வாகம் முழுமையான முயற்சிகளை மேற்கொண்டதை காட்டுவதாக அது மேலும் குறிப்பிட்டது.
மருத்துவ அதிகாரிகள் தினமும் மூன்று முறை இம்ரான் கானை சந்தித்து, அவரது உணவை சரிபார்ப்பதுடன், இரத்த அழுத்தம், இதய துடிப்பு மற்றும் ஆக்சிஜன் அளவு உள்ளிட்ட முக்கிய உடல்நல குறியீடுகளை பரிசோதிப்பதாக அது கூறியது. சிறைவாசத்தின் போது அவரது மருத்துவ பதிவுகள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகின்றன.