

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை ரகசியமாகச் சந்தித்துப் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேலில் அடுத்த வாரம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நெதன்யாகுவுக்குத் தனது ஆதரவை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த ரகசியப் பயணம் அரங்கேறியுள்ளது.
இந்த சந்திப்பு குறித்து வாஷிங்டனோ அல்லது இஸ்ரேல் தரப்போ இதுவரை அதிகாரப்பூர்வ அறிக்கை எதையும் வெளியிடவில்லை.
அக்டோபர் 7, 2023 ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலில் நடக்கும் முதல் தேர்தல் இதுவாகும்.
காசா, லெபனான் மற்றும் ஈரானுடன் இஸ்ரேல் தொடர்ந்து போரில் ஈடுபட்டுள்ள நிலையில், தற்போதைய கருத்துக்கணிப்புகள் நெதன்யாகுவின் கூட்டணி பெரும்பான்மையை இழக்கக்கூடும் எனக் காட்டுகின்றன.
சனம் வக்கீல் (சாதம் ஹவுஸ் திங்க் டேங்க்):
"டிரம்பின் ஆதரவு அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. வாஷிங்டனுடனான உறவுக்குத் தான் எவ்வளவு இன்றியமையாதவர் என்பதை நெதன்யாகு தனது நாட்டு மக்களுக்கு நிரூபிக்க இது உதவும். ஆனால், ஈரான் போரின் தாக்கம் மற்றும் அக்டோபர் 7 சம்பவங்களால் இஸ்ரேல் வாக்காளர்கள் கடுமையாகப் பிரிந்துள்ளனர்.
ஆண்ட்ரியாஸ் கிரீக் (கிங்ஸ் காலேஜ் லண்டன்):
"தேர்தல் பிரச்சாரத்தில் திணறி வரும் நெதன்யாகுவுக்கு டிரம்பின் ஆதரவு ஒரு 'அரசியல் பரிசு'. இது சில வலதுசாரி வாக்காளர்களை ஈர்க்க உதவலாமே தவிர, நெதன்யாகுவுக்குத் தேவையான முழுப் பெரும்பான்மையை இது மட்டுமே உருவாக்கித் தந்துவிடாது" என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் நவம்பர் தொடக்கத்தில் நாடாளுமன்ற இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இந்தத் தேர்தலுக்கு முன்னரோ அல்லது பின்னரோ ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்த பென்டகன் தயாராகி வருவதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டிரம்பின் இந்த அணுகுமுறை, எதிர்காலத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராகப் பெரிய அளவிலான கூட்டு ராணுவத் தாக்குதலை நடத்துவதற்கான அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது. இது ஈரானியத் தலைவர்களிடையே, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இலக்குகள் ஒன்றுதான் என்ற எண்ணத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
நெதன்யாகுவை டிரம்ப் ஆதரிக்கும் அதே வேளையில், அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் இஸ்ரேல் தேர்தலில் தலையிட மறுத்துள்ளார். இதற்கு முன்னதாக, அமெரிக்காவை நெதன்யாகுதான் போருக்குள் இழுத்துவிட்டார் என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டியவர் வான்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய பேட்டியில் நெதன்யாகுவை ஆதரிக்கிறீர்களா என்ற கேள்விக்கு, "நான் அமெரிக்க வேட்பாளர்களை மட்டுமே ஆதரிக்கிறேன். நான் இஸ்ரேல் தேர்தலில் தலையிட விரும்பவில்லை. நான் நெதன்யாகுவுக்கு ஆதரவும் தெரிவிக்கவில்லை, எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை" என்று வான்ஸ் தனது கருத்தை தெளிவுபடுத்தியுள்ளார்.