அதிபரை ஓரம்கட்டிவிட்டு ஈரான் அரசு அதிகாரத்தை கையில் எடுக்கிறதா இஸ்லாமிய காவல்படை? | Iran war

ஒரு காலத்தில் துணை ராணுவப் படையாக இருந்த இஸ்லாமிய புரட்சிகர காவல்படை, இப்போது ஈரானின் நிழல் அரசாங்கமாக உருவெடுத்துள்ளது.
அதிபரை ஓரம்கட்டிவிட்டு ஈரான் அரசு அதிகாரத்தை கையில் எடுக்கிறதா இஸ்லாமிய காவல்படை? | Iran war
Published on

ஈரானின் அதிகாரத்தை அந்நாட்டின் ராணுவப் பிரிவான இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) தன்வசப்படுத்தியுள்ளதாக லண்டனை தளமாக கொண்ட ஈரான் இன்டர்நேஷனல் வெளியிட்ட செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்க, இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்ட பிறகு, அவரது மகன் மொஜ்தபா காமேனி புதிய உச்ச தலைவராக அறிவிக்கப்பட்டார். ஆனால், அவர் தற்போது எங்கே இருக்கிறார் என்பது மர்மமாகவே உள்ளது.

போர் தொடங்கிய பிறகு மொஜ்தபா காமேனி பொதுவெளியில் தோன்றவில்லை. அவரது செய்திகள் நேரலையில் வாசிக்கப்படுகின்றனவே தவிர, அவர் நேரில் பேசவில்லை. அவர் தாக்குதலில் படுகாயமடைந்து மோசமான நிலையில் இருப்பதாக அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தரப்பினர் தெரிவிகின்றனர்.

உச்ச தலைவர் நேரில் இல்லாத சூழலில், இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் மூத்த அதிகாரிகள் அடங்கிய இராணுவ கவுன்சில் முக்கிய போர் முடிவுகளை எடுத்து வருகிறது.

ஹார்முஸ் ஜலசந்தியை இப்போது இந்த படையே முழுமையாக நிர்வகித்து வருகிறது.

இதற்கிடையே வளைகுடா நாடுகளைத் தொடர்ந்து இலக்கு வைக்கும் IRGCயின் போக்கிற்கு ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் எதிராக இருப்பதாக கூறப்படுகிறது.

அவர் பேச்சுவார்த்தையை விரும்புவதாகவும் எனவே அவரின் மிதவாத போக்கு காரணமாக அவரை பெயரளவிலான அதிபராக மட்டும் இருக்கும்படி ஓரம்கட்டிவிட்டு இஸ்லாமிய புரட்சிகர காவல்படை முழு அதிகாரத்தையும் கையில் எடுத்துள்ளதாக ஈரான் இன்டர்நேஷனல் செய்தி அறிக்கை தெரிவிக்கிறது.

அதிபர் பெசெஷ்கியன் உச்ச தலைவரைச் சந்திக்கக் கோரிய கோரிக்கைகளை இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தொடர்ந்து நிராகரித்து வருவதாக கூறப்படுகிறது.

1979 புரட்சிக்குப் பிறகு உருவான இஸ்லாமிய புரட்சிகர காவல்படை, தற்போது ஈரானின் எண்ணெய் வளம், போக்குவரத்து, வங்கி மற்றும் ரியல் எஸ்டேட் என அனைத்துத் துறைகள் மீதும் தனது கட்டுப்பாட்டை நிறுவியுள்ளதாக கூறப்படுகிறது.

இதன்மூலம் ஒரு காலத்தில் துணை ராணுவப் படையாக இருந்த இஸ்லாமிய புரட்சிகர காவல்படை, இப்போது ஈரானின் நிழல் அரசாங்கமாக உருவெடுத்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com