வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி.. ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனியின் வீடியோ வெளியீடு!

"மொஜ்தபா காமெனியின் மரணம் குறித்து விரைவில் செய்தி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை" - தி ஜெருசலேம் போஸ்ட்
மொஜ்தபா காமேனியின் வீடியோ
மொஜ்தபா காமேனியின் வீடியோ
Published on

ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனியின் புதிய வீடியோ வெளியிடப்பட்டு அவரின் உடல்நிலை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நடத்திய கூட்டுத் தாக்குதலில் அயதுல்லா அலி காமேனி உயிரிழந்ததை அடுத்து அவரது மகன் மொஜ்தபா காமேனி மார்ச்சில் நாட்டின் உச்ச தலைவராக நியமிக்கப்பட்டார்.

ஆனால் பிப்ரவரி 28 அன்று நடந்த தாக்குதலுக்கு பிறகு அவர் பொதுவெளியில் தோன்றவே இல்லை. அன்றைய தாக்குதலில் அவரும் படுகாயமடைந்ததாவும் ரகசிய இடத்தில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது.

வதந்தி

அவர் வெளியிட்டதாக நம்பப்படும் ஊடக மற்றும் சமூக வலைதள அறிக்கைகளே பொதுவெளிக்கு வந்தன. மற்றபடி காமேனி இருக்குமிடம் ரகசியமாகவே வைக்கப்பட்டது. பிப்ரவரி 28 தாக்குதலில் மொஜ்தபா முகம் சிதைந்துவிட்டதாகவும் அவர் உயிருடன் இருக்க வாய்ப்பே இல்லை என்றும் மேற்கத்திய ஊடகங்கள் கூறி வந்தன. அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் இதே பாட்டை பாடி வந்தார்.

கடந்த மாதம் பிரம்மாண்டமாக நடந்த தந்தை அயத்துல்லா இறுதிச்சடங்கிலும் அவர் பங்கேற்காதது இந்த சந்தேகங்களை வலுப்படுத்தியது. ஆனால் பாதுகாப்பு காரணங்களால் அவர் அதில் கலந்துகொள்ளவில்லை என ஈரான் விளக்கம் அளித்தது.

இதனிடையே மொஜ்தபா உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகச் சில இஸ்ரேலிய ஊடகங்கள் தொடர்ச்சியாகச் செய்திகளை வெளியிட்டு வந்தன.

குறிப்பாக, தி ஜெருசலேம் போஸ்ட் நாளிதழ் வெளியிட்ட செய்தியில், "மொஜ்தபா காமெனியின் மரணம் குறித்து விரைவில் செய்தி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை" என்று குறிப்பிட்டிருந்தது.

வீடியோ

இந்நிலையில் இந்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மொஜ்தபா காமேனியின் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஈரான் அரசு செய்தி நிறுவனமான மெஹர் நியூஸ், இந்த வீடியோவை வெளியிட்டு அவர் முழு ஆரோக்கியத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ளது.

வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், மொஜ்தபா காமெனி ஒரு குழுவினருக்கு முன்னால் அமர்ந்து அவர்களுடன் உரையாடி கொண்டிருக்கிறார். அங்கிருப்பவர்கள் அனைவரும் அவர் பேசுவதை மிகவும் கவனமாகக் கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இருப்பினும் இந்த வீடியோவில் அது எடுக்கப்பட்ட தேதி எதுவுமில்லை.

உச்சத் தலைவரின் இத்தகைய வீடியோ காட்சிகள் வெளியாவது இதுவே முதன்முறை என மெஹர் நியூஸ் தெரிவித்துள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com