

ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி போர் தொடுத்தன. இதில் முதல் நாளிலேயே ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனி கொல்லப்பட்டார்.
இதையடுத்து அவரது மகன் மொஜ்தபா கமெனி ஈரானின் புதிய உச்ச தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் இதுவரை அவர் பொதுவெளியில் தோன்றவில்லை.
அமெரிக்காவின் தாக்குதலில் காயம் அடைந்த மொஜ்தபா கமெனி சிகிச்சை பெற்று வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டது.
அதன்பின் மொஜ்தபா கமெனி பெயரில் அறிக்கைகள் வெளியானது. இதில் அமெரிக்கா-இஸ்ரேலுக்கு அவர் எச்சரிக்கைகளை விடுத்து இருந்தார்.
இந்த நிலையில் மொஜ்தபா கமெனியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று இஸ்ரேலிய ஊடகமான சேனல் 14 செய்தி வெளியிட்டுள்ளது. மொஜ்தபா கமெனியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும், எந்த நேரத்திலும் அவர் இறக்கக்கூடும் என்றும் ஈரானின் உயர்மட்டத் தலைவர்களிடையே தகவல்கள் பரவி உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்து உள்ளது.
அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து உள்ளது. ஈரான் அதிபர் பெசெஷ்கியனின் அமைச்சரவைக்கு நெருக்கமான ஒரு வட்டாரம்,"மொஜ்தபா கமெனி விரைவில் மரணம் அடைந்ததற்கான செய்தியைக் கேட்டால் அதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை" என்று கூறியதாக இஸ்ரேல் ஊடகம் தெரிவித்து உள்ளது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு உச்ச தலைவர் மொஜ்தபாவுடன் தொடர்பு கொள்வது மிகவும் கடினமாக இருப்பதாக ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.