அமெரிக்காவில் பீட்சா விற்பனை செய்து வந்த இந்திய இளைஞர் சுட்டுக்கொலை

நியூயார்க்கில் பீட்சா விற்பனை செய்து வந்த பஞ்சாபி இளைஞர் குர்தீப் சிங் சுட்டு கொலை செய்யப்பட்டார்.
US Punjabi youth shot dead
Published on

அமெரிக்காவில் அடையாளம் தெரியாத நபரால் 27 வயதான பஞ்சாபி இளைஞர் குர்தீப் சிங் சுட்டு கொல்லப்பட்ட சம்பவத்திற்கு அமெரிக்காவில் உள்ள வட அமெரிக்க பஞ்சாபி சங்கம் கண்டம் தெரிவித்துள்ளது.

பஞ்சாப் இளைஞர்

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த குர்தீப் சிங் என்பவர், கடன் வாங்கி அமெரிக்காவுக்கு வந்து சிறிய வேலைகளை செய்து தனது பெற்றோர்களுக்கு பணம் அனுப்பி வந்துள்ளார்.

அமெரிக்காவில் 13 ஆண்டுகளாக வசித்து வந்த குர்தீப் சிங், ஆகஸ்ட் 21-ம் தேதி இரவு ஏற்பட்ட அடையாளம் தெரியாத நபருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து சுட்டுக் கொல்லப்பட்டார். குயின்ஸ் பகுதியைச் சேர்ந்த அவர், ஈஸ்ட் நியூயார்க் சுற்றுப் புறத்தில் உள்ள ஸ்டான்லி அவென்யூ அருகே பீட்சா விநியோகித்து கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார்.

இரவு 10 மணியளவில் நடந்த துப்பாக்கிச் சூட்டை அடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு காவல்துறை அதிகாரிகள் சென்றபோது, மார்பில் சுடப்பட்ட நிலையில் குர்தீப் சிங் இருந்துள்ளார்.

அப்போது அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

சிசிடிவி காட்சிகள் ஆய்வு

இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தபோது, அந்த தெருவில் இருவர் சண்டையிடுவதும் பின்னர் அந்த மர்ம நபர் குர்தீப் சிங் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு, காரில் ஏறி தப்பிச் செல்வது பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து நியூயார்க் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கொள்ளை முயற்சி ஒன்றின்போது இந்த துப்பாக்கிச் சூடு நடந்திருக்கலாம் என தெரிவித்தனர். இதையடுத்து துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியோடிய மர்ம நபரை நியூயார்க் போலீசார் தேடிவருகின்றனர்.

குர்தீப் சிங் தந்தை

அமெரிக்காவில் குர்தீப் சிங் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து அவரின் தந்தை பியாரா லால் கூறுகையில், அவர் அமெரிக்காவுக்கு பயணம் செய்வதற்காக கணிசமாக கடன் வாங்கியதாகவும், ஆனால் அங்கு சென்றடைந்த பிறகு பெரும் சிரமங்களை எதிர்கொண்டதாகவும் கூறினார்.

மேலும் தனது குடும்பத்திற்கு ஒரு சிறந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதற்காக அவர் இரவும் பகலும் வேலை பார்த்ததாக அவரின் தந்தை குறிப்பிட்டார்.

இதையடுத்து அவரது உடலை விரைவில் இந்தியாவிற்கு கொண்டுவர ஏற்பாடு செய்யுமாறு குடும்பத்தினர் அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும், குற்றம் சாட்டப்பட்டவரை விரைவாகக் கைது செய்யவும், அவருக்குக் கடுமையான தண்டனை வழங்கப்படுவதை உறுதி செய்யவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அமெரிக்க அதிகாரிகளை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

வட அமெரிக்க பஞ்சாப் சங்கம்

இந்தச் கொலை சம்பவம் குறித்து வட அமெரிக்க பஞ்சாபி சங்கத்தின் (NAPA) நிர்வாக இயக்குநர் சத்னம் சிங் சஹால் கூறுகையில், “ஒவ்வொரு முறையும் ஒரு இளம் பஞ்சாபியோ அல்லது சீக்கியரோ கொல்லப்படும்போது, ஒரு குடும்பம் சிதைக்கப்படுகிறது.

தொடர்ச்சியான வன்முறையை, சமூகம் சகித்துக்கொண்டு வாழப் பழகிக்கொள்ளும் ஒரு விஷயமாக நாம் அனுமதிக்க முடியாது. பெருகிவரும் பாதிக்கப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்படும் மற்றொரு பெயராக குர்தீப் சிங் மாறிவிடக்கூடாது. போதும், இதுவே போதும்,” என்று அவர் கூறினார்.

மேலும் வட அமெரிக்க பஞ்சாபி சங்கம், குர்தீப் சிங்கின் கொலைக்கான சரியான நோக்கத்தை கண்டறியுமாறு புலனாய்வாளர்களிடம் கேட்டுக்கொண்டதோடு, விசாரணை முடிவதற்குள் எந்தவொரு முடிவிற்கும் வர வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.

இந்திய துணை தூதரகம்

இந்தியர் மீதா+ன இந்த தாக்குதல் குறித்து இந்தியத் துணைத் தூதரகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “நியூயார்க்கின் புரூக்ளின் நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், இந்திய குடிமகனான குர்தீப் சிங் மரணம் அடைந்ததை அறிந்து நாங்கள் வருத்தம் அடைகிறோம்.

இந்த இக்கட்டான நேரத்தில் எங்கள் எண்ணங்களும் ஆழ்ந்த இரங்கல்களும் அவரது குடும்பத்தினருடன் உள்ளன. துணைத் தூதரகம் அவரது குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதுடன், சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது” என்று பதிவிட்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com