

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த நபர் ஒருவருக்கு, லாட்டரி மூலம் ரூபாய் 12.95 கோடி பரிசு கிடைத்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் கிஷோர் பாண்டுரங் ராவ் என்பவர் 1993 ஆம் ஆண்டில் இருந்து வசித்து வருகிறார்.
இவர் பல ஆண்டுகளாக துபாய், அஜ்மான், ஷார்ஜா மற்றும் அபுதாபியில் வசித்து சிறிய வேலைகளை செய்து வந்துள்ளார்.
இவர் அக்டோபர் 3 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரக லாட்டரி தளத்தின் மூலம் ஈஸி பிக் விருப்பத்தை பயன்படுத்தி லாட்டரி ஒன்றை வாங்கியுள்ளார்.
இவர் வாங்கிய லாட்டரி இரண்டாம் பரிசை வென்று, இந்திய மதிப்பில் ரூபாய் 12.95 கோடியை பெற்று தந்துள்ளது. மேலும் இவர் வாங்கிய லாட்டரியில், முதல் பரிசுக்கான தொகையில் ஒரு எண் மட்டுமே வேறுபட்டு இருந்தது.
இதன் காரணமாக இவர் சுமார் 80 கோடி ரூபாய் பரிசுத்தொகையை ஒரு எண்ணில் தவறவிட்டார்.
இதையடுத்து லாட்டரி மூலம் தனக்கு கிடைத்த 12 கோடி குறித்து ராவ் கூறுகையில், “நான் அமைதியாக அமர்ந்து ஆன்லைனில் பார்த்து கொண்டிருந்தபோது, ஐக்கிய அரபு அமீரக லாட்டரியில் இருந்து எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது.
ஆரம்பத்தில் அது ஒரு வழக்கமான சரிபார்ப்பு மின்னஞ்சல் என நினைத்தேன். பிறகு நான் திகைத்து போனேன், சிறிது நேரம் என்ன செய்வதென்றோ அல்லது என்ன சொல்வதென்றோ தெரியாமல் அப்படியே அமர்ந்திருந்தேன்.
முதலில் இந்த செய்தியை எனது மனைவியிடம் கூறினேன், அவர் அந்த எதிர்பாராத செய்தியை கேட்டு மகிழ்ச்சி அடைந்தார்.
நாங்கள் இருவரும் எங்கள் இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்வோம். இப்போது இந்த தொகை கிடைத்துள்ளதால், நான் இதை என் மனைவியுடனும், எனது குழந்தையுடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
என்றாவது ஒரு நாள் எனக்கு கோல்டன் விசா கிடைக்கும் என நம்பியிருந்தேன், இப்பொழுது கோல்டன் விசாவுக்கு விண்ணப்பிக்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
எனக்கு கோல்டன் விசா கிடைத்தவுடன், எனது மனைவியுடன் உலகம் முழுவதையும் சுற்றிப்பார்க்க திட்டமிட்டுள்ளேன்.
நான் உலகம் முழுவதும் பயணம் செய்ய வேண்டும் என்பதே எனது ஆசை. என் மனைவிக்கும் பயணம் செய்வதில் மிகுந்த ஆர்வம் உள்ளதால், நான் அந்த இடங்களை அவருடன் சேர்ந்து பார்க்க வேண்டும்.
எனது மூத்த மகன் சொந்த தொழில் தொடங்குவதற்கும், இளைய மகனின் படிப்பு செலவுக்கும் கொடுக்க உள்ளேன்” என்று கூறினார்.