

வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ள நேபாளத்திற்கு ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வீதம் வரும் டிசம்பர் மாதம் வரை 654 மெகாவாட் மின்சாரம் வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது.
நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி கோஷி நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் ரசுவா மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.
2 வாரங்கள் கடந்தும் மீட்பு பணிகள் தொடந்து வருகின்றன. செப்டம்பர் 13 நிலவரப்படி உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,388 ஆக உயர்ந்துள்ளது. 13,728 பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மாயமான 5,130 பேரை தேடும் பணி நடந்து வருகிறது.
வெள்ளத்தால் ஏற்பட்ட பொருட் சேதம் மற்றும் உள்கட்டமைப்பு சேதத்தால் நேபாளம் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளது.
குறிப்பாக வெள்ளபெருக்கு ஏற்பட்ட பகுதிகளில் நீர்மின் திட்ட கட்டுமானங்கள் சேதமடைந்து நாட்டின் மின் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில், அண்டை நாடு எனும் முறையில் கூடுதல் மின்சாரத்தை நேபாளத்திற்கு வழங்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி, செப்டம்பர் 13 முதல் டிசம்பர் 31 வரை நேபாளத்திற்கு அதிகபட்சமாக 654 மெகாவாட் மின்சாரத்தை வழங்க செய்ய இந்திய மின்சார அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த மின் விநியோகம் தினமும் நள்ளிரவு 12 மணி முதல் மாலை 6 மணி வரை, அதாவது 18 மணி நேரத்திற்கு வழங்கப்படும்.
இந்தியா மற்றும் நேபாளம் இடையே மின்சாரத்தை பரிமாறிக்கொள்வதற்காக ஏற்கனவே கிராஸ் பார்டர் பவர் டிரான்ஸ்மிஷன் லைன் வழியாக கூடுதல் மின்சாரம் அனுப்பப்படும்.
இதில் 600 மெகாவாட் மின்சாரம் முசாபர்பூர் - டல்கேபார் 400 கேவி டபுள் சர்க்யூட் லைன் வழியாகவும், மீதமுள்ள 54 மெகாவாட் மின்சாரம் தனக்பூர் - மகேந்திரநகர் 132 கேவி சிங்கிள் சர்க்யூட் லைன் வழியாகவும் அனுப்பப்படவுள்ளது.
தற்போதைக்கு இந்த ஏற்பாடு டிசம்பர் 31 வரை நடைமுறையில் இருக்கும். ஜனவரி 2027 முதல் எந்த அளவில் மின்சாரம் வழங்கப்படும் என்பது குறித்து டிசம்பரில் ஆய்வு செய்து முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாள மின் உற்பத்தியில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டு, நாட்டின் மின் தேவைக்கும் விநியோகத்திற்குமான இடைவெளி அதிகரித்துள்ள சூழலில் நேபாளம் தனது மின் கட்டமைப்பைச் சீரமைக்கும் வரை இந்த அவசரகால மின் விநியோகம் பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மின்சாரம் தவிர, இந்தியா மனிதநேய உதவிகளையும் நேபாளத்திற்குச் செய்து வருகிறது.
ஆகஸ்ட் 26 முதல் இந்திய விமானப்படையின் 8 சிறப்பு விமானங்கள் மூலம் நிவாரணப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் மீட்புக் குழுக்கள் காத்மாண்டுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
செப்டம்பர் 9 வரை சுமார் 130 டன்னுக்கும் அதிகமான நிவாரணப் பொருட்கள் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளன.