

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நித்யா ராமன்(வயது 45) வெற்றி பெற்றார். அவர் மேயராக இருந்த கேரன் பாசை தோற்கடித்தார்.
இதன்மூலம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் முதல் இந்திய வம்சாவளி மேயா் என்ற வரலாற்றுப் பெருமையைப் பெற்றார்.
வெற்றி குறித்து நித்யா ராமன் கூறியதாவது:-
லாஸ் ஏஞ்சல்சின் அடுத்த மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை நான் பெருமையாக கருதுகிறேன். நான் கேரன் பாசிடம் பேசினேன்.
அவரது தலைமைத்துவத்திற்கும், பல தசாப்தங்களாக அவர் ஆற்றிய சேவைக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டேன்.
அவர் இல்லையென்றால், இன்றைய லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் இவ்வளவு சிறப்பாக இருந்திருக்காது.
இந்த நகரத்தை நான் நேசிக்கிறேன். இங்குள்ள மக்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை உண்டு. இனி செய்ய வேண்டிய பணிகள் கடினமானவை. மாற்றங்கள் நிகழக் கால அவகாசம் தேவைப்படும்.
நாம் அனைவரும் இணைந்து நமது இந்த நகரத்திற்கு ஏற்ற வகையில், மிகச் சிறப்பானதொரு எதிர்காலத்தை உருவாக்கு வோம். வாருங்கள், பணியைத் தொடங்குவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
1981-ம் ஆண்டு கேரளத்தில் பிறந்த நித்யா ராமன், தமிழ் குடும்பத்தை சேர்ந்தவர். தனது 6-வது வயதில் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். 22 வயதில் அமெரிக்கக் குடியுரிமை பெற்றார்.