வான்வழிப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு: நூற்றுக்கணக்கான அமெரிக்க விமானங்கள் ரத்து

நெவார்க் மற்றும் JFK விமான நிலையங்களுக்கான விமானங்கள் நிறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
US Flights
Published on

கட்டுமான பணியின் போது ஏற்பட்ட தொலைத்தொடர்பு இணைப்புத் துண்டிப்பு காரணமாக, அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை விமான நிலையங்களில் இருந்து புறப்படும் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன அல்லது தாமதமாகின என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

போக்குவரத்து செயலாளர் ஷான் டஃபி வானொலியில் பேசும் போது, சுமார் 1900 GMT மணியளவில், லாகார்டியா விமான நிலையம் மற்றும் பிலடெல்பியாவில் விமானங்கள் மீண்டும் இயங்க தொடங்கியதாகவும், அதே நேரத்தில் நெவார்க் மற்றும் JFK விமான நிலையங்களுக்கான விமானங்கள் நிறுத்தப்பட்டதாகவும் கூறினார்.

168 விமானங்கள் ரத்து:

"நியூ ஜெர்சியில் ஆம்ட்ராக் கட்டுமான பணியாளர்கள் தவறுதலாக ஒரு ஃபைபர் இணைப்பை வெட்டியதால், தொலைத்தொடர்பு சேவை தடைபட்டதுடன், வடகிழக்குப் பகுதியில் விமானப் பயணங்களை இடைநிறுத்த FAA-ஐ நிர்பந்தித்தது," என்று டஃபி கூறினார்.

ஆம்ட்ராக் என்பது அமெரிக்காவின் பயணிகள் ரெயில் நிறுவனம் ஆகும். FlightAware-இன் தகவல்படி, சுமார் 1900 GMT மணியளவில், நியூயார்க் நகரப் பகுதியின் முக்கிய மையமான நெவார்க் விமான நிலையத்தில் 168 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன மற்றும் 97 விமானங்கள் தாமதமாகின, அதே நேரத்தில் பிலடெல்பியாவில் 63 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன மற்றும் 189 விமானங்கள் தாமதமாகின.

இரண்டு பிரச்சனைகளால் உருவானது:

ஃபெடரல் விமான போக்குவரத்து நிர்வாகத்தின் தலைவர் பிரையன் பெட்ஃபோர்டின் கூற்றுப்படி, நேற்று (திங்கள்கிழமை) விமான நிலையத்தில் ஏற்பட்ட இடையூறு இரண்டு பிரச்சனைகளால் உருவானது.

தொலைத்தொடர்பு இணைப்பில் ஏற்பட்ட செயலிழப்பைக் கண்டறிந்த பிறகு, "பேக்கப் ஃபைபரில் ஒரு முறிவு ஏற்பட்டிருப்பதை கண்டறிந்தோம்," என்று புதிய வான்வழி போக்குவரத்து தொழில்நுட்பங்கள் குறித்து செய்தியாளர்களுக்கு விளக்கமளித்த பின்னர் பெட்ஃபோர்ட் கூறினார்.

பிற்பகலுக்குள் முதன்மை அமைப்பு சீரமைக்கப்பட்டுவிடும் என எதிர்பார்ப்பதாகவும், ஆனால் மாற்று மின் இணைப்பைச் சரிசெய்ய 13 மணி நேரம் தேவைப்படும் எனவும் அவர் மதிப்பிட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com