

பெருவில் 'ஹிட்லர் முசோலினி' என்ற பெயர் கொண்ட வேட்பாளர் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி.
'ஹிட்லர் முசோலினி' என்ற பெயர் கொண்ட வேட்பாளர் பெருவில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
45 வயதான ஹிட்லர் முசோலினி சிமியோன் ப்ளோரஸ், பெருவில் ஆண்டிஸ் மலைத்தொடரில் 1,000க்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட தொலைதூர மாவட்டமான கெரோபால்காவின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பெருவின் தேர்தல் ஆணையத்தின்படி, இந்த வாக்கெடுப்பில் 700க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர், இதில் சிமியோன் சுமார் 34 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.
இரண்டாம் இடத்தைப் பிடித்த வேட்பாளரை விட வெறும் 25 வாக்குகள் வித்தியாசத்தில், சிமியோன் 229 வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.
அவர் 20ஆம் நூற்றாண்டின் மிகவும் மோசமான இரண்டு சர்வாதிகாரிகளின் பெயர்களை கொண்டுள்ளதால், இந்தச் சிறிய கிராமத்தில் நடந்த தேர்தல் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.
ஹிட்லர் முசோலினி சிமியோன் ப்ளோரஸ், தலைநகர் லிமாவிலிருந்து 360 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹுவானுகோ மாகாணத்தில் பிறந்து வளர்ந்தவர் ஆவார்.
அவரின் இந்த பெயருக்கு அவரின் பெற்றோரின் அரசியல் சித்தாந்தம் காரணம் அல்ல.
பெரு நாட்டின் கிராமப்புறங்களிலும், பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகளிலும் தங்கள் குழந்தைகளுக்கு உலகப் புகழ்பெற்ற வரலாற்று நபர்களின் பெயர்களை வைப்பது ஒரு வழக்கமாக உள்ளது.
அந்தப் பெயர்களை கொண்டவர்கள் என்ன செய்தார்கள் என்பதை ஆராயாமல், அவை கேட்பதற்கு கம்பீரமாக இருக்கின்றன என்ற காரணத்திற்காக பெற்றோர் இப்பெயர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
பெருவின் அரசியலில் இத்தகைய பெயர்கள் புதியவை அல்ல. 2018ல், "ஹிட்லர் குவெஸ்க்லின் ஆல்பா சான்செஸ்" என்ற பெயருடைய ஒருவர் பெருவின் யுங்கார் மாவட்டத்தின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.