அமெரிக்காவின் நியூ ஹாம்ப்ஷயர் மாகாணத்தில் உள்ள கான்கார்ட் பொது நூலகத்தில் இருந்து 132 ஆண்டுகளுக்கு முன்பு இரவல் வாங்கப்பட்ட 19-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு பழைய மாத இதழ், தற்போது நூலகத்திடமே பத்திரமாகத் திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 1894-ஆம் ஆண்டு வெளியான "தி செஞ்சுரி இல்லஸ்ட்ரேட்டட் மன்த்லி மேகசின்". இந்த இதழை மொத்தம் 48,220 நாட்கள் தாமதமாகத் திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளது.
நூலக விதிகளின்படி இதற்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.10 லட்சத்திற்கும் மேல் அபராதம் விதிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், நூலகத்தின் புதிய சலுகையால் இந்த அபராதம் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
ஜான் என்ற வாசகர் இந்த இதழை நூலகத்தில் ஒப்படைத்தார். இது குறித்து அவர் கூறும்போது, இந்த இதழ் பல தசாப்தங்களாகத் தனது வீட்டில்தான் கிடந்ததாகவும், ஆனால் இது எப்படித் தன் வீட்டிற்கு வந்தது என்பது தனக்கே தெரியாது என்றும் கூறியுள்ளார்.
சமீபத்தில் உள்ளூர் செய்தித்தாள் ஒன்றில், நூலகம் அபராதங்களை ரத்து செய்துள்ள செய்தியைப் படித்த பிறகே, இதைத் திரும்பக் கொடுக்க அவர் முடிவு செய்துள்ளார்.
கான்கார்ட் பொது நூலகம் கடந்த செப்டம்பர் 1 முதல் ஒரு வருட காலத்திற்கு அபராதக் கட்டணங்களுக்கு முழு விலக்கு அளிப்பதாக அறிவித்துள்ளது. "அபராதமில்லா நூலகம்" என்ற இந்தத் திட்டத்தின் மூலம் பல பழைய புத்தகங்கள் திரும்ப வரும் என்று எதிர்பார்த்ததாகவும், ஆனால் 19-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு இதழ் திரும்ப வரும் என்று தாங்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்றும் நூலக நிர்வாகம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.
132 ஆண்டுகள் பழமையான இந்த இதழ் இனி பொதுமக்களின் புழக்கத்திற்கு விடப்படாது. அதற்குப் பதிலாக, இந்த நூலகத்தில் உள்ள உள்ளூர் வரலாற்றைப் பாதுகாக்கும் பிரத்யேகப் பகுதியான "கான்கார்ட் அறையில்" காட்சிக்கு வைக்கப்படலாம் என்று நூலக நிர்வாகம் அதன் சமூக ஊடகப் பக்கத்தில் தெரிவித்துள்ளது.