

அமெரிக்காவின் கிராமப்புற டென்னசி பகுதியில் உள்ள 'பூன் ஏரி' என்ற இடத்தில், பாறையில் மோதி மூழ்கிக்கொண்டிருந்த படகில் தவித்த 4 டீன்-ஏஜ் இளைஞர்களை 10, 12 மற்றும் 13 வயதுடைய மூன்று உடன்பிறப்புகள் மிகவும் சாதுரியமாக மீட்டு சாதனை படைத்துள்ளனர். கடும் இடி மின்னலுடன் கூடிய புயல் தாக்கும் சில நிமிடங்களுக்கு முன்பு இந்த அதிரடி மீட்புச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஸ்கவுட் பயிற்சியில் தாங்கள் கற்றுக் கொண்ட திறமைகளைப் பயன்படுத்தி இந்தச் சிறுவர்கள் நிகழ்த்திய வீர தீரச் செயல் தற்போது உலகளவில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
டெக்லான் ஜாக்சன் (10), கோர்மக் ஜாக்சன் (12) மற்றும் எல்சா ஜாக்சன் (13) ஆகிய மூன்று சிறுவர்களும் பூன் ஏரி பகுதியில் உள்ள தங்களது தாத்தா-பாட்டி வீட்டிற்கு விடுமுறைக்கு வந்திருந்தனர். அப்போது டெக்லானும் எல்சாவும் ஏரிக்கரையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
திடீரென ஏரியின் நடுப்பகுதியில் இருந்து ஃபாக்ஹார்ன் சத்தமும், "காப்பாற்றுங்கள்!
எங்களைக் காப்பாற்றுங்கள்!" என்ற அலறல் சத்தமும் கேட்டது. உற்றுப் பார்த்தபோது, ஏரியின் நடுவே நான்கு இளைஞர்கள் கைகளை அசைத்து உதவி கோருவதை அவர்கள் கண்டனர். உடனடியாக டெக்லான் தனது தாத்தா-பாட்டியிடம் விபரத்தைக் கூற ஓடினான். அதற்குள் மற்ற இரு உடன்பிறப்புகளும் தங்களது சிறிய 'பாண்ட் பிராவ்லர்' மீன்பிடிப் படகை மீட்புப் பணிக்காகத் தயார் செய்தனர்.
ஏரியின் நடுவே இருந்த ஒரு பெரிய பாறையில் மோதியதால் அந்த இளைஞர்களின் படகிற்குள் தண்ணீர் வேகமாகப் புகுந்து மூழ்கத் தொடங்கியிருந்தது. மிக மோசமாக, படகின் பேட்டரி இருக்கும் பகுதி வரை தண்ணீர் ஏறிவிட்டதால், மின்சாரம் பாய்ந்து தாங்கள் இறந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் அந்த இளைஞர்கள் உறைந்து போயிருந்தனர்.
அப்போது 12 வயது சிறுவன் கோர்மக், தனது சிறிய படகை ஓட்டிக்கொண்டு ஆபத்தான பகுதிக்குச் சென்றான். பயத்தில் இருந்த 4 இளைஞர்களும் ஒரே நேரத்தில் கோர்மக்கின் சிறிய படகில் ஏற முயன்றனர். ஆனால், படகு பாரம் தாங்காமல் கவிழ்ந்துவிடும் என்பதை உணர்ந்த கோர்மக், "அனைவரும் ஒரே நேரத்தில் ஏற வேண்டாம், என்னால் ஒரு நேரத்தில் ஒருவரை மட்டுமே ஏற்றிச் செல்ல முடியும்" என்று சாதுரியமாகக் கூறி தடுத்தான்.
முதலில் மரண பயத்தில் கதறிக்கொண்டிருந்த ஒரு இளம்பெண்ணை கோர்மக் தனது படகில் ஏற்றினான். அந்தப் பெண் தான் இறந்துவிடுவேன் என்று பயந்தபோது, தான் சமீபத்தில் ஸ்கவுட் இயக்கத்தில் பெற்ற 'உயிர் காக்கும் தகுதி முத்திரை'பற்றி கூறி, அவளுக்குத் தைரியம் அளித்து கரை சேர்த்தான்.
தொடர்ந்து அடுத்த இளைஞரையும், அவர்களது எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் அடங்கிய பையையும் சிறுவர்கள் மீட்டனர். அதற்குள் அருகில் இருந்த படகுத் துறைமுக உரிமையாளரும், மற்றொரு போன்டூன் படகும் சம்பவ இடத்திற்கு வந்து மற்ற இளைஞர்களை மீட்டனர். கிராமப்புற பகுதி என்பதால் அவசரக்கால மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வர அரை மணி நேரம் ஆனது. ஆனால், அதற்குள் சிறுவர்கள் பாதிப் பேரை மீட்டிருந்தனர்.
கடைசி இளைஞரும் பாதுகாப்பாகக் கரை சேர்க்கப்பட்ட சில நிமிடங்களிலேயே, அந்தப் பகுதியில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய பயங்கரமான புயல் தாக்கத் தொடங்கியது. சிறுவர்கள் சரியான நேரத்தில் செயல்படவில்லை எனில், புயலில் சிக்கி அந்த இளைஞர்களின் படகு முற்றிலும் மூழ்கி பெரிய அசம்பாவிதம் நடந்திருக்கும்.
தங்களது குழந்தைகளின் இந்த வீரச் செயலைக் கண்டு அவர்களது தாய் லாரா ஜாக்சன் நெகிழ்ச்சியடைந்துள்ளார். குழந்தைகளான டெக்லான் ஒரு கப் ஸ்கவுட் என்றும், கோர்மக் ஃபர்ஸ்ட் கிளாஸ் ஸ்கவுட் என்றும், எல்சா லைஃப் ஸ்கவுட் மற்றும் சில்வர் அவார்டு கேர்ள் ஸ்கவுட் என்றும் அவர் பெருமையுடன் தெரிவித்துள்ளார்.