

ஜிம்பாப்வேயில் ஆறு பேருடன் சென்ற ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது; இதில் உயிர் தப்பியவர்கள் யாரும் இல்லை எனத் தெரிகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தலைநகர் ஹராரேயின் தென்கிழக்கில் உள்ள மரோண்டேரா மாவட்டத்தின் கிராமப்புற பகுதியில் இந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
ஒரு முக்கிய தொழிலதிபர் உட்பட நான்கு பயணிகளும், இரண்டு பணியாளர்களும் ஹெலிகாப்டரில் இருந்ததாக அரசாங்க செய்தித் தொடர்பாளர் நிக் மங்வானா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். "தற்போதைய தகவல்களின்படி" உயிர் தப்பியவர்கள் யாரும் இல்லை என்று அவர் கூறினார்.
மங்வானாவும் காவல்துறையும் ஹெலிகாப்டரில் இருந்தவர்களை உடனடியாக அடையாளம் காட்டவில்லை. மீட்பு குழுவினர் சம்பவ இடத்தில் இருப்பதால், கூடுதல் விவரங்கள் பின்னர் வழங்கப்படும் என்று காவல்துறை கூறியது.
முன்னதாக அமெரிக்காவின் அட்லாண்டா அருகே உள்ள டாட்சன்வில் பகுதியில் நடைபெற்ற கோலாகலத் திருமண விழாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டேவ் ஃபிஜி (25) மற்றும் ஜென்சி ஆகியோர் திருமண பந்தத்தில் இணைந்தனர். நூற்றுக்கணக்கான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பங்கேற்ற இந்த விழாவின் இறுதியில், புதுமணத் தம்பதியினரை சிறப்பு வழியனுப்பும் விதமாக ஹெலிகாப்டர் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இரவு நேரத்தில் பயணம் புறப்பட்டபோது அப்பகுதியில் பலத்த மழையும், அடர்ந்த மூடுபனியும் நிலவியுள்ளது. வணிக ரீதியிலான விமானியாக பணியாற்றி வந்த மணமகன் டேவ் ஃபிஜி, வானிலை மிகவும் மோசமாக இருப்பதால் பயணத்தைத் தவிர்க்கலாம் என கூறியபோதிலும், ஹெலிகாப்டர் விமானி பயணத்தை தொடர முடிவு செய்ததாக கூறப்படுகிறது. ஹெலிகாப்டர் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அடர்ந்த காட்டுப் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து மரங்களில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் மணமகன் டேவ் ஃபிஜி மற்றும் ஹெலிகாப்டரை இயக்கிய நிகில் நர்குண்டகர் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வர தாமதமானதால், படுகாயமடைந்த மணமகள் ஜென்சி, உயிரிழந்த தனது கணவரின் உடலுக்கு அடியில் சுமார் 6 மணி நேரம் நசுங்கிய நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதித்தனர்.