

இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜனநாயக கட்சி வேட்பாளர் சுஹாஸ் சுப்ரமணியம், அமெரிக்காவில் நடைபெற்ற இடைத்தேர்தலில், குடியரசுக் கட்சி வேட்பாளர் டேவ் டி பெக்வித்தை தோற்கடித்து அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள வர்ஜீனியா மாகாணத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெற்றோர்களுக்கு மகனாக சுஹாஸ் சுப்ரமணியம் பிறந்தார்.
இவரது தந்தை சென்னையை சேர்ந்தவராகவும், தாயார் பெங்களூருவைச் சேர்ந்தவராகவும் அறியப்படுகின்றனர்.
இவர் டுலேன் பல்கலைக்கழகம் மற்றும் நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தின் பிரிட்ஸ்கர் சட்டப் பள்ளியில் தனது படிப்பை முடித்துவிட்டு வழக்கறிஞராக பணியாற்றி வந்தார்.
இவர் அரசியலில் நுழைவதற்கு முன்பு, முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் கீழ் வெள்ளை மாளிகையில் தொழில்நுட்ப கொள்கை ஆலோசகராக பணியாற்றினார்.
இவர் 2019-ல் வர்ஜீனியா பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, அதனை தொடர்ந்து 2023 முதல் 2024 வரை மாநில செனட்டில் பணியாற்றினார்.
இந்த நிலையில் தற்போது அமெரிக்காவில் நடைபெற்ற இடைத்தேர்தலில், சுப்ரமணியம் 63.16 சதவீதத்துடன் 1,73,106 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
அதே நேரத்தில் அவரை எதிர்த்து போட்டியிட்ட பெக்வித் 34.66 சதவீதத்துடன் 94,990 வாக்குகளைப் பெற்றார்.
இதையடுத்து சுப்பிரமணியம் விர்ஜுனியா மாகாணத்தின் 10-வது நாடாளுமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் முதல் இந்திய-அமெரிக்கராக உருவெடுத்துள்ளார்.
முன்னதாக அமெரிக்காவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது, அதிகரித்து வரும் செலவுகள், சுகாதாரப் பாதுகாப்பு குறித்த கவலைகள் மற்றும் மத்திய அரசு ஊழியர்களை நடத்தும் விதம் ஆகியவை தொடர்பாக அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தை சுப்ரமணியம் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
மேலும், கிரீன் கார்டு நிலுவைகள் மற்றும் எச்-1பி விசா திட்டத்தில் உள்ள சவால்கள் உட்பட, இந்தியத் தொழில் வல்லுநர்களை பாதிக்கும் பிரச்சினைகள் குறித்தும் அவர் குரல் எழுப்பினார்.
இதைத்தொடர்ந்து அமெரிக்காவில் வெறுப்பும் பாகுபாடும் அதிகரித்து வருவதால், இந்திய-அமெரிக்கர்கள் இடைக்கால தேர்தல்களில் தீவிரமாக பங்கேற்க வேண்டும் எனவும் சுப்ரமணியம் வலியுறுத்தியிருந்தார்.