H-1B விவகாரத்தில் விமர்சனங்களுக்கு அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வென்ஸ் விளக்கம்!

அமெரிக்கர்கள் செய்யும் வேலைக்கு வெளிநாட்டு ஒப்பந்த அடிமைகளை இறக்குமதி செய்வதை நிறுத்துங்கள் என ஜேடி வான்ஸ்
JD Vance
Published on: 
Summary

அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களை "ஒப்பந்த அடிமைகள்" எனக் குறிப்பிட்டுப் பேசிய விவகாரத்தில் எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வென்ஸ் தனது மாமனார் மற்றும் மாமியாரைக் குறிப்பிட்டுத் தன் பேச்சுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

ஜே.டி.வென்ஸின் அந்தப் பேச்சு "தேவையற்றது மற்றும் மிகவும் புண்படுத்தக்கூடியது" என்று இந்தியா அண்மையில் கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், அவர் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.

"என் வார்த்தைகள் குறையுடையதாக இருக்கலாம்" - ஜே.டி.வென்ஸ்

தனது முந்தைய பேச்சு குறித்துப் பேசிய ஜே.டி.வென்ஸ், "எனது சொல்லாடல் சில குறைபாடுகளைக் கொண்டிருந்திருக்கலாம் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், வெளிநாட்டு ஊழியர்களை வரவேற்பதற்கும், அதே நேரத்தில் அமெரிக்கத் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கும் இடையே அமெரிக்கா ஒரு சரியான சமநிலையைக் கண்டறிய வேண்டும்" என்று தனது குடியேற்றக் கொள்கை நிலைப்பாட்டை ஆதரித்துப் பேசினார்.

மேலும், தனது குடும்பத்தைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், "தென்னிந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்குக் குடியேறிய எனது மாமனார் மற்றும் மாமியாரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர்களின் மகள் (உஷா வென்ஸ்) அமெரிக்காவில் பிறந்து, இன்று இந்த நாட்டின் 'இரண்டாம் பெண்மணி' ஆகியுள்ளார். அவரைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன், அவரை ஆழமாக நேசிக்கிறேன்" என்று உருக்கமாகத் தெரிவித்தார்.

சர்ச்சையின் பின்னணி என்ன?

இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்க நிறுவனங்கள் உள்ளூர் தொழிலாளர்களைப் பணியமர்த்த வேண்டும் என்று வலியுறுத்திய ஜே.டி.வென்ஸ், "அமெரிக்கத் தொழிலாளர்கள் மகிழ்ச்சியுடன் செய்யத் தயாராக இருக்கும் ஒரு வேலைக்காக, வெளிநாட்டிலிருந்து ஒரு ஒப்பந்த அடிமையை இறக்குமதி செய்வதை நிறுவனங்கள் நிறுத்த வேண்டும்" என்று H-1B விசா ஊழியர்களைக் சாடிப் பேசினார்.

இதனைத் தொடர்ந்து, டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் மைக்ரோசாப்ட் (Microsoft), காக்னிசென்ட் மற்றும் இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான இன்ஃபோசிஸ் , டிசிஎஸ் , விப்ரோ, ஹெச்சிஎல், கேப்ஜெமினி ஆகிய நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களுக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்குவதற்கான முதற்கட்ட 'பெர்ம்' திட்டத்தில் புதிய விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கத் தற்காலிகத் தடை விதித்தது.

"ஒப்பந்த அடிமை" சொல்லுக்கு எழுந்த எதிர்ப்பு

வரலாற்று ரீதியாக 'ஒப்பந்த அடிமைகள்' என்ற சொல், கடுமையான சுரண்டல்களுக்கும், சுதந்திரமற்ற சூழலுக்கும் ஆளாக்கப்பட்ட தொழிலாளர்களைக் குறிப்பதாகும்.

குறிப்பாக, 19 மற்றும் 20-ஆம் நூற்றாண்டுகளில் பிரிட்டிஷ் ஆட்சியின் போது லட்சக்கணக்கான இந்தியர்கள் மொரிஷியஸ், பிஜி, கரீபியன் மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளுக்குத் தோட்டத் தொழிலாளர்களாக அனுப்பப்பட்ட வரலாற்றுத் துயரத்தை இச்சொல் குறிப்பதால், இந்திய வம்சாவளியினர் மத்தியில் இதற்குப் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

இந்தியாவின் கடும் கண்டனம்

ஜே.டி.வென்ஸின் இந்த அவதூறான பேச்சுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஏற்கனவே கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்திருந்தது. இதுகுறித்து இந்தியா வெளியிட்ட அறிக்கையில், "அமெரிக்கப் பொருளாதாரத்திற்கும் அதன் கண்டுபிடிப்புத் துறைக்கும் இந்தியத் தொழில்நுட்ப வல்லுநர்கள் வழங்கி வரும் பங்களிப்பை இத்தகைய பேச்சுகள் முற்றிலுமாகப் புறக்கணிக்கின்றன.

அமெரிக்காவில் உள்ள இந்தியப் பணியாளர்கள் மிகவும் உயர்கல்வி கற்ற, திறமைமிக்கப் பங்களிப்பாளர்கள் என்பதை மறுக்க முடியாது" என்று குறிப்பிட்டிருந்தது. மேலும், இந்திய ஐடி நிறுவனங்கள் மீதான கிரீன் கார்டு கட்டுப்பாடுகள் இரு நாடுகளின் கூட்டு வளர்ச்சிக்கு எதிரானது என்றும் புது தில்லி கவலை தெரிவித்திருந்தது.

தனது நிலைப்பாட்டை நியாயப்படுத்திய வென்ஸ்

தற்போது இதற்குப் பதிலளித்துள்ள வென்ஸ், அமெரிக்க நிறுவனங்கள் தங்களின் செலவைக் குறைப்பதற்காக ஏற்கனவே பணிபுரியும் அமெரிக்கக் கணக்காளர்களை வேலையை விட்டு நீக்கிவிட்டு, வெளிநாட்டிலிருந்து குறைந்த ஊதியத்திற்கு ஊழியர்களைக் கொண்டு வருவதாகக் குற்றம் சாட்டினார்.

இது அமெரிக்கத் தொழிலாளர்களுக்குச் செய்யப்படும் அநீதி என்றும், அளவுக்கு அதிகமான குடியேற்றம் நாட்டின் சமூக ஒற்றுமையையும் கலாச்சாரத்தையும் பாதிப்பதாகவும் அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com