கோகோ கோலா குடித்து செஞ்சுரி அடித்த தாத்தா: இளமையாக வாழ ஜாலியான டயட் சீக்ரெட்!

இவர் தனது இரவு உணவை மாலை 5 மணிக்கே முடித்துவிடுவார். இரவு சரியாக 8 மணிக்குத் தூங்கச் சென்றுவிடுகிறார்.
Grandpa
Published on: 
Summary

லுவின் உணவுமுறை சற்று விசித்திரமாக இருந்தாலும், அவரது தினசரி வாழ்க்கை முறையில் கடுமையான மற்றும் ஒழுக்கமான நடைமுறைகளைக் கடைப்பிடித்து வருகிறார்.

உலகம் முழுவதும் உள்ள மக்கள் உடல் நலனைப் பேணிக் காக்க சர்க்கரை அளவைக் குறைப்பது, ஆரோக்கியமான உணவு முறைகளைக் பின்பற்றுவது போன்ற பல்வேறு வழிமுறைகளைக் கடைப்பிடித்து வருகின்றனர். ஆனால், சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தைச் சேர்ந்த 101 வயதான 'லு' என்ற முதியவர் இதற்கெல்லாம் முற்றிலும் மாற்றாக வாழ்ந்து வருகிறார். இவரின் வயதுக்கு முரணான மற்றும் ஆரோக்கிய விதிமுறைகளைத் தகர்க்கும் விசித்திரமான உணவுப் பழக்கம் தற்போது இணையத்தில் உலகளவில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பொதுவாக முதியவர்கள் உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு துரித உணவுகள் மற்றும் கார்போனேட்டட் பானங்களைத் தவிர்ப்பது வழக்கம். ஆனால், லு தனது பெரும்பாலான சேமிப்புப் பணத்தை தனக்குப் பிடித்த உணவு வகைகளுக்காகவே செலவிடுகிறார். இவரது வீட்டில் கோகோ கோலா மற்றும் ஸ்பிரைட் போன்ற குளிர்பானங்கள் எப்போதும் ஸ்டாக் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக, துகளளவு ஒயிட் ஒயின் சேர்க்கப்பட்ட சில்லென்ற ஸ்பிரைட் பானத்தை இவர் மிகவும் விரும்பி அருந்துகிறார். உணவு விசயத்தில் அலாதியான ஆர்வம் கொண்ட இவர், ஒரு வேளைக்கு அரை கிண்ணம் சோற்றுடன் ஒரு முழு தட்டு நிறைய நண்டுகள், மீன், இறால் மற்றும் பன்றி இறைச்சி போன்றவற்றை ஆர்வமாக உட்கொள்கிறார். மேலும், தர்பூசணி, பேரிக்காய் மற்றும் கமலா ஆரஞ்சு போன்ற அதிக இனிப்பு சுவை கொண்ட பழங்களையும் தனது உணவுப் பட்டியலில் சேர்த்துக் கொண்டுள்ளார்.

தினசரி வாழ்க்கை முறை

லுவின் உணவுமுறை சற்று விசித்திரமாக இருந்தாலும், அவரது தினசரி வாழ்க்கை முறையில் கடுமையான மற்றும் ஒழுக்கமான நடைமுறைகளைக் கடைப்பிடித்து வருகிறார். இவர் தனது இரவு உணவை மாலை 5 மணிக்கே முடித்துவிடுவார். இரவு சரியாக 8 மணிக்குத் தூங்கச் சென்றுவிடும் பழக்கத்தைக் கொண்டுள்ளார். அதிகாலை 4 மணிக்கே விழித்துவிட்டாலும், உடனடியாக படுக்கையை விட்டு எழாமல், சுமார் இரண்டு மணி நேரம் படுக்கையிலேயே உடலை மென்மையாக நீட்டி மடக்கி ஓய்வெடுப்பார். பின்னர் காலை 6 மணிக்கு எழுந்து தனது நாளைத் தொடங்கும் இவர், மதிய வேளையிலும் தவறாமல் குட்டித் தூக்கம் போடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

வியக்க வைக்கும் உடல் நலம்

இத்தனை ஆண்டுகளாக குளிர்பானங்களை விரும்பி அருந்திய போதிலும், லு தனக்கு நல்ல ஆரோக்கியம் இருப்பதாகப் பெருமிதம் தெரிவிக்கிறார். தனக்கு இதுவரை பெருமளவில் சளி தொல்லை கூட ஏற்பட்டதில்லை என்றும், ரத்த அழுத்தம் சீராக இருப்பதாகவும் அவர் குறிப்பிடுகிறார். கடந்த ஆண்டு வரை தனது சொந்தத் தள்ளுவண்டியில் மார்க்கெட்டுக்குச் சென்று வந்த இவர், ஒரு சிறிய விபத்தில் கீழே விழுந்த பிறகு குடும்பத்தினரின் அறிவுறுத்தலின்படி பயணத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டார்.

தற்பொழுது பீஜிங் மற்றும் அருகில் உள்ள தொழிற்சாலையில் பணிபுரியும் அவரது இரண்டு மகன்கள் இவரைப் பார்த்துக் கொள்ள பிரத்யேகமாக ஒரு உதவியாளரை நியமித்துள்ளனர். மேலும் ஜெஜியாங் மாகாண அரசு சார்பில் நூறு வயது கடந்த முதியவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகையையும் பெற்றுக்கொண்டு மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com