உலகின் நீர்வளம் தொடர்ந்து குறைந்து வருகிறது - உலக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!

நீர் சுழற்சியானது பெருவெள்ளத்திற்கும், வறட்சிக்கும் இடையே ஊசலாடி வருகிறது.
World Meteorological Organization
Published on

உலக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

புவி வெப்பமடைதல் மற்றும் தீவிர சூப்பர் எல்நினோ தாக்கத்தால் காலநிலை சீரற்றதாக மாறிவருகிறது. இதன் காரணமாக உலகின் நீர் சுழற்சி கணிக்கமுடியாத ஒன்றாக மாறிவருவதாக ஐக்கிய நாடுகளின் அங்கமான உலக வானிலை அமைப்பு தனது சமீபத்திய அறிக்கையில் எச்சரித்துள்ளது.

அறிக்கை

உலக வானிலை மையத்தின் சமீபத்திய அறிக்கையில் கடந்த 35 ஆண்டுகளில், 2025 ஆம் ஆண்டு மிகவும் வறண்ட ஆண்டாக அமைந்திருந்தது என்றும், கடந்த 7 ஆண்டுகளாக ஆற்று நீரோட்டம் இயல்புக்கு மாறாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 10 ஆண்டுகளில் உலகின் பல பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வரும் வேளையில், அனைத்துப் பகுதிகளிலும் பனியாறுகளும் சுருங்கியுள்ளன என்று உலக வானிலை அமைப்பு கண்டறிந்துள்ளது.

நீரின் அளவு சரிவு

உலக வானிலை மையத்தின் அறிக்கையின் படி, பூமியின் நன்னீர் சேமிப்பு அதாவது நிலத்தடி நீர், ஏரிகள், ஆறுகள், மண் ஈரப்பதம், தாவரங்கள், பனி, உறைபனி ஆகியவற்றில் சேமிக்கப்பட்டுள்ள மொத்த நீரின் அளவு ஒரு தசாப்த காலமாகத் தொடர்ந்து சரிந்து வருவதை இந்த அறிக்கையானது வெளிகொண்டுவந்துள்ளது.

செலஸ்டே சௌலோ

உலக வானிலை ஆய்வு மையத்தின் பொதுச்செயலாளர் செலஸ்டே சௌலோ கூறும்போது நீர் தொடர்பான பேரழிவுகளை நாம் அதிகமாகக் எதிர்கொண்டு வருகிறோம். வலுப்பெற்று வரும் எல் நினோ, சில பகுதிகளில் வறட்சி அபாயத்தையும், மற்ற பகுதிகளில் வெள்ளப்பெருக்கு அபாயத்தையும் அதிகரிக்கும் என்று கவலை தெரிவித்துள்ளார்

மேலும் அவர் பேசும்போது, இதுவரை இந்த நீண்டகால நீர் சேமிப்புகள் பூமியின் சேமிப்பு வளம் போன்று செயல்பட்டு வந்தன. ஒரு மோசமான மழைக்காலம் அல்லது வறட்சி ஏற்பட்டாலும், அந்த சேமிப்புகள் தண்ணீர் நெருக்கடியை சமாளிக்க உதவின.

ஆனால் தற்போது அந்த சேமிப்பை நாம் தொடர்ந்து காலி செய்து வருகிறோம். 2014-2016 காலகட்டத்திலிருந்து உலகின் நிலப்பரப்பு நீர் சேமிப்பில் தொடர்ந்து சரிவு காணப்படுகிறது. இது சுமார் ஒரு தசாப்தமாக நீடிக்கும் கவலைக்குரிய போக்காகும் என்று தெரிவித்தார்.

நீரோட்டம்

கடந்த 35 ஆண்டுகளில், உலகளவில் ஆற்று நீர் வெளியேற்றத்தைப் பொறுத்தவரை 2025 ஆம் ஆண்டு மிகவும் வறண்ட ஆண்டுகளில் ஒன்றாக அமைந்தது. உலகின் மொத்த ஆற்றுப்படுகை பரப்பில் சுமார் 36 சதவீதம் பகுதிகளில் இயல்பை விட குறைவான நீரோட்டம் காணப்பட்டது. கடந்த 7 ஆண்டுகளில் இந்த அளவு 34 முதல் 38 சதவீதத்துக்குள் மட்டுமே இருந்ததாக அறிக்கை கூறுகிறது.

உருகும் பனிப்பாறை

உலகின் நிலப்பரப்பில் சேமிக்கப்பட்டுள்ள மொத்த நீரின் அளவானது, 2010-களின் நடுப்பகுதியிலிருந்து தொடர்ந்து சரிவை சந்தித்து வந்துள்ளதாக உலக வானிலை ஆய்வு மையத்தின் சமீபத்திய அறிக்கை தெரிவித்துள்ளது.

குறிப்பாக, 2025-ம் ஆண்டு தொடர்ந்து 4-வது ஆண்டாக உலகின் அனைத்து முக்கிய பனிப்பாறை பகுதிகளிலும் பனிக்கட்டி அளவு குறைந்துள்ளது. 2023 முதல் 2025 வரையிலான 3 ஆண்டுகளில் மட்டும் உலக பனிப்பாறைகள் சுமார் 1,400 ஜிகாடன் அளவிலான நீரை இழந்துள்ளதாக உலக வானிலை ஆய்வு மையத்தின் சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com