உலகம் முழுவதும் வானை ஒளிரச் செய்த 'ரத்த நிலவு' - நிலவு ஏன் சிவப்பாக மாறியது?

சந்திர கிரகண நிகழ்வை சமூக ஊடகங்களில் நேரலை செய்த நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி முகமைகள்
Lunar Eclipse 2026
Published on

வானியல் ஆர்வலர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த 2026 ஆம் ஆண்டின் மிக முக்கிய வானியல் நிகழ்வான பகுதி சந்திர கிரகணம் நிகழ்ந்தது.

சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்த நேரத்தில் பூமியின் நிழல் சந்திரனின் மீது விழுவதால், அது இரவு வானில் ஒரு சிவப்பு நிறப் பந்து போலக் காட்சியளிக்கும்.

இன்று நிகழ்ந்த கிரகணம் ஒரு முழுமையான சந்திர கிரகணம் இல்லை என்றாலும், அதற்கு மிக நெருக்கமான ஒரு ஆழ்ந்த பகுதி சந்திர கிரகணம் ஆகும்.

விண்வெளியில் நடந்தது என்ன?

இந்த கிரகணத்தின் போது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி கடந்து சென்றது. எனினும், இவை மூன்றும் துல்லியமான நேர்க்கோட்டில் அமையாததால் இது பகுதி கிரகணமாகக் கருதப்படுகிறது.

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த கிரகணத்தின் உச்சக்கட்ட நேரத்தில் நிலவின் 96.3 சதவீத பகுதி பூமியின் அடர்ந்த நிழலால் மறைக்கப்பட்டது.

இதனால், மிக அழகான சந்திர கிரகணமாக இது இருந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நாசாவின் கூற்றுப்படி, பகுதி கிரகண நிலை UTC நேரம் அதிகாலை 2:34 மணிக்குத் தொடங்கியது. அப்போது, ​​பூமியின் நிழல் முதன்முதலில் முழு நிலவின் மீது கண்ணுக்குத் தெரியும் ஒரு பகுதியைக் கீறியது.

இது UTC நேரம் அதிகாலை 4:13 மணியளவில் அதன் உச்சத்தை அடைந்து, பின்னர் UTC நேரம் காலை 7:01 மணி அளவில் பகுதி மற்றும் புறநிழல் நிலைகள் வழியாகப் படிப்படியாக மங்கியது.

நிலவு ஏன் சிவப்பு நிறமாக மாறியது?

பூமியின் நிழலுக்குள் சந்திரன் முழுமையாக மறைந்தாலும், அது முற்றிலும் இருண்டு போகவில்லை. சூரியனின் கதிர்கள் பூமியின் வளிமண்டலத்தைக் கடந்து நிலவின் மீது விழுந்தன.

பூமியின் வளிமண்டலமானது நீல நிற ஒளியை வடிகட்டி, சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிற அலைநீளங்களை மட்டுமே நிலவின் மீது விழச் செய்தது.

அந்த ஒளிரும் சிவப்பு ஒளி நிலவிலிருந்து பிரதிபலித்ததால், கிரகணத்தின் போது நிலவு சிவப்பு நிறத்தில் காட்சியளித்தது.

கிரகணம் எங்கு தென்பட்டது?

வடக்கு மற்றும் தெற்கு அமெரிக்கப் பகுதிகளில், மக்கள், தெளிவான இரவு வானில் கிரகணத்தை முழுமையாக ரசித்தனர். இது தவிர, மேற்கு ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், போர்ச்சுகல், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி மற்றும் மேற்கு ஆப்பிரிக்கப் பகுதிகளில் விடியற்காலை வேளையில் சந்திர அஸ்தமனத்திற்கு முன் மக்கள் கண்டனர்.

இந்தியாவில் தெரியவில்லை

புவியியல் அமைப்பின்படி, இந்த கிரகண நேரத்தின்போது இந்தியாவில் பகல் பொழுது. இதனால் இந்தியாவில் இந்த கிரகணத்தை நேரடியாகப் பார்க்க முடியவில்லை.

இந்தியாவில் இருப்பவர்கள் மற்றும் மேகமூட்டம் காரணமாக இதைப் பார்க்க முடியாதவர்களுக்காக, நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி முகமை, தங்களது அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மற்றும் சமூக ஊடகப் பக்கங்களில் இந்நிகழ்வை நேரலை செய்தன.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com