

ஜெர்மனியின் போச்சம் நகரில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், கேரளாவைச் சேர்ந்த இரண்டு இளம்பெண்கள் உட்பட 3 இந்தியர்கள் கொடூரமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த தீ விபத்து தற்செயலானது அல்ல என்றும், அவர்கள் திட்டமிட்டு எரித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் ஜெர்மனி நாட்டுப் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
உயிரிழந்த மூவரும் கேரளாவின் வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
நோவா சாபு (வயது 25) என்பவர் இடுக்கி மாவட்டம் கட்டப்பனை அருகே உள்ள இரட்டையார் பகுதியைச் சேர்ந்தவர். இவர் வேலைக்காகக் கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் ஜெர்மனி சென்றுள்ளார்.
அஞ்சலி எஸ். ஜாய் (வயது 25) என்பவர் கொல்லம் மாவட்டம் பெரிநாட்டைச் சேர்ந்தவர். பி.எட் பட்டதாரியான இவர், கடந்த ஜூலை மாதம் ஜெர்மனி சென்று அங்குள்ள ஒரு கிடங்கு தளவாட நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
சிவின் ஜோனி (வயது 26) என்பவர் எர்ணாகுளம் மாவட்டம் காலடி, தோட்டாக்கம் பகுதியைச் சேர்ந்தவர்.
இவர்கள் அனைவரும் ஜெர்மனியின் போச்சம் நகரின் ஹோஃப்ஸ்டெட் மாவட்டத்தில் உள்ள போஸ்ட்ட்ராஸ் பகுதியில் அமைந்த ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்றாக வசித்து வந்தனர்.
சம்பவத்தன்று அதிகாலை சுமார் 4:15 மணியளவில், இவர்கள் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பில் திடீரெனப் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
மரத்தாலான படிக்கட்டுகள் வழியாகத் தீ மிக வேகமாக மேல் தளங்களுக்குப் பரவியதால், பிரதான நுழைவு வாயில் முற்றிலும் புகை மூட்டத்தால் சூழப்பட்டு குடியிருப்பாளர்கள் வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர், ஏணிகளைப் பயன்படுத்திப் பலரை மீட்டனர். எனினும், கட்டிடத்தின் இரண்டாவது தளத்தில் இருந்த ஒரு குடியிருப்பில் நோவா சாபு, அஞ்சலி மற்றும் சிவின் ஜோனி ஆகிய மூவரும் கருகிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர்.
மேலும், புகை மூட்டத்தால் மூச்சுத்திணறல் ஏற்பட்ட மற்றொரு மலையாளி மாணவர் உட்பட 5 பேர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தத் தீ விபத்து குறித்து ஜெர்மனி போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் தீவிர விசாரணை நடத்தினர். அதில், மின் கசிவோ அல்லது வேறு எந்தவொரு தொழில்நுட்பக் கோளாறோ தீ விபத்திற்குக் காரணம் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. யாரோ வேண்டுமென்றே தரைத் தளத்தில் தீ வைத்துள்ளதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்பது தடயவியல் சான்றுகள் மூலம் தெரியவந்தது.
இதற்கிடையே, சம்பவத்திற்கு முந்தைய நாள் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களிடையே ஒரு பெரிய தகராறு ஏற்பட்டதாக அண்டை வீட்டார் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, அதே குடியிருப்பில் வசித்து வந்த 41 வயதான ருமேனிய நாட்டைச் சேர்ந்த ஒரு நபரை போலீசார் சந்தேகத்தின் பேரில் கைது செய்து, கொலைக் குற்றச்சாட்டின் கீழ் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சொந்த ஊரில் இருந்து கனவுகளுடன் ஜெர்மனி சென்ற 3 இளம் இந்தியர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் கேரளாவில் உள்ள அவர்களது குடும்பத்தினரிடையே பேரிடியாய் இறங்கியுள்ளது.
இது குறித்துப் பேசிய கேரள சுற்றுலாத்துறை அமைச்சர் பி.சி. விஷ்ணுநாத், உயிரிழந்தவர்களின் உடல்களைத் தாயகம் கொண்டு வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நோர்கா அமைப்பு மற்றும் ஜெர்மனியில் உள்ள இந்திய தூதரகத்தின் மூலம் மாநில அரசு தீவிரமாக ஒருங்கிணைத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.