

அமெரிக்காவில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றின் என்ஜினுக்குள் நான்கு அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று இருந்தது கண்டறியப்பட்டதையடுத்து, விலங்குகள் மீட்பு குழுவினர் மலைப்பாம்பை பிடித்து சென்றனர்.
அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த விண்டி டக், தனது வாகனத்தை வழக்கம் போல வீட்டிற்கு வெளியே நிறுத்தி இருந்தார்.
அப்போது உரிமையாளர் கார் என்ஜினை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, அதில் விசித்திரமான அசைவுகளை கண்டுள்ளார்.
கார் என்ஜினுக்குள் சரியான வெளிச்சம் இல்லாததால், முதலில் அதை அவர் ஒரு அழுக்கான குழாய் என்று நினைத்துள்ளார்.
பின்னர் அது அசையத் தொடங்கி, அவரை நோக்கி சீறியுள்ளது, அப்போது தான் அவருக்கு அது ஒரு 4 அடி நீளமுள்ள மலைப்பாம்பு என்று தெரியவந்துள்ளது.
இதையடுத்து கார் என்ஜினுக்குள் பதுங்கி இருந்த மலைப்பாம்பை பிடிப்பதற்காக, மில்வாக்கி பகுதியில் உள்ள விலங்குகள் மீட்பு குழுவிடம் கார் உரிமையாளர் தகவல் தெரிவித்தார்.
தகவலறிந்து வந்த மீட்பு குழுவினர், காரின் முன்பக்கத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு, பாம்பு வெளியே நகரும்படி ஒரு நீள கம்பால் மலைப்பாம்பை சீண்டினர்.
இதைத்தொடர்ந்து பல மணி நேரத்திற்கு பிறகு, கார் என்ஜின் பகுதியில் மறைந்து கொண்டிருந்த மலைப்பாம்பு வெளியே வந்தது.
பின்னர் மீட்புக் குழுவினர் அந்த மலைப்பாம்பை பிடித்து விலங்குகள் கட்டுப்பாட்டு ஆணையத்திற்கு கொண்டு சென்றனர்.