

முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு (83) பரவி வரும் புரோஸ்டேட் புற்றுநோய் மேலும் தீவிரமடைந்து, அவரது எலும்புகள் மற்றும் உடலின் பிற பாகங்களுக்கும் பரவியுள்ளதாக அவரது மகன் ஹண்டர் பைடன் தெரிவித்துள்ளார்.
2025 மே மாதம் ஜோ பைடனுக்கு கடுமையான புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. தற்போது இந்நோய் எலும்புகளுக்குப் பரவியுள்ளதால், அவர் கடுமையான வலியினாலும் உடல்நலக் குறைவாலும் அவதிப்பட்டு வருவதாக ஹண்டர் பைடன் கூறியுள்ளார். பைடனின் புற்றுநோய் திசு பரிசோதனையில் கிளீசன் ஸ்கோர் 9 எனப் பதிவாகியுள்ளது. இது புற்றுநோயின் மிகத் தீவிரமான நிலையைக் (Grade Group 5) குறிக்கிறது.
கதிர்வீச்சு மற்றும் ஹார்மோன் சிகிச்சைகள் வழங்கப்பட்ட போதிலும், புற்றுநோய் செல்கள் எலும்புகளுக்கு அப்பாலும் பரவி, அவரது உடலை மிகவும் பலவீனப்படுத்தியுள்ளன. இதுகுறித்து அவரது மகன் ஹண்டர் பைடன் கூறுகையில், "என் தந்தை கடுமையான வலியால் அவதிப்படுவதைப் பார்ப்பது மிகவும் வேதனையாக உள்ளது. இருப்பினும், அவர் தனது மன உறுதியுடன் தொடர்ந்து பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்" என்று குறிப்பிட்டுள்ளார்.
புரோஸ்டேட் பகுதியில் உருவாகும் புற்றுநோய் செல்கள், ரத்த ஓட்டம் அல்லது நிணநீர் மண்டலம் வழியாக உடலின் பிற பகுதிகளுக்குப் பரவுவது 'மெட்டாஸ்டாசிஸ்' எனப்படும். புரோஸ்டேட் புற்றுநோய் முதன்முதலில் எலும்புகளிலேயே (குறிப்பாக முதுகெலும்பு, இடுப்பு மற்றும் தொடை எலும்புகள்) அதிகம் பரவுகிறது. புற்றுநோய் செல்கள் எலும்புகளை அடைந்து அதன் வலிமையை இழக்கச் செய்வதால், கடுமையான வலி, எலும்பு முறிவு மற்றும் நடப்பதில் சிரமம் போன்றவை ஏற்படுகின்றன.
* ஆரம்ப கட்டத்தில் புரோஸ்டேட் புற்றுநோய்க்கு பெரிய அறிகுறிகள் இருக்காது.
* நோய் தீவிரமடைம்போது சிறுநீர் கழிப்பதில் சிரமம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீரில் ரத்தம் வருதல் மற்றும் இடுப்புப் பகுதியில் வலி போன்றவை ஏற்படும்.
புற்றுநோய் எலும்புகளுக்குப் பரவிய பின், அதை முற்றிலுமாக குணப்படுத்துவதை விட நோயின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதும் வலியைக் குறைப்பதுமே முதன்மை சிகிச்சையாக இருக்கும். புற்றுநோய் செல்கள் வளர்வதற்குக் காரணமான டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனைத் தடுக்கும் சிகிச்சை.
கதிர்வீச்சு சிகிச்சை என்பது எலும்புகளில் ஏற்படும் வலியைக் குறைக்கவும், புற்றுநோய் பரவலைக் கட்டுப்படுத்தவும் வழங்கப்படுகிறது. பிஸ்ஃபோஸ்ஃபோனேட்ஸ் போன்ற மருந்துகள் மூலம் எலும்பு முறிவுகள் தடுக்கப்படுகின்றன.வயது முதிர்வு மற்றும் நோயின் தீவிரம் காரணமாகவும், ஜோ பைடன் தகுந்த மருத்துவக் கண்காணிப்பில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.