

கடந்த சில நாட்களாக நேபாளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 7 பேர் காயமடைந்துள்ள நிலையில், 4 பேர் மாயமானதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
செப்.24 முதல் நேபாளில் பருவமழை பெய்துவருகிறது. இந்த பருவமழையால் மண் தளர்வடைந்து மலை ஒன்று சரிந்த வீடியோக்கள் கூட இணையத்தில் நேற்று வைரலாகின.
இந்த மழை, அதனால் ஏற்பட்ட நிலச்சரிவு, வெள்ளம் போன்ற பேரிடர்களால் 1,082 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 114 கால்நடைகளும் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பருவமழை காலத்தில் மட்டும் 304 நிலச்சரிவுச் சம்பவங்கள் நிகழ்ந்ததாக நேபாள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலச்சரிவால் மட்டும் 20 பேர் உயிரிழந்தாகவும், வெள்ளம் தொடர்பான 87 சம்பவங்களில் நான்கு பேர் உயிரிழந்ததாகவும், கனமழை தொடர்பான 151 சம்பவங்களில் மூன்று பேர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
கடந்த மாதம் நேபாள - திபெத் எல்லையில் இமயமலையின் பனிப்பாறைகள் சரிந்ததால் ஏற்பட்ட பேரிடரின் பாதிப்புகளில் இருந்தே நேபாளம் இன்னும் மீளாத நிலையில், இந்த பருவமழை மேலும் பாதிப்பை உண்டாக்கியுள்ளது.
ஆகஸ்ட் 26 அன்று ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் குறைந்தது 1,453 பேர் உயிரிழந்தனர், மேலும் 5,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயினர்.