

இந்தோனேசியாவில் சட்டவிரோத தங்க சுரங்கள் வெள்ளத்தில் மூழ்கியதில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்
இந்தோனேசியாவில் மேற்கு ஜாவா மாகாணத்தின் போகோர் மாவட்டத்தில் கடந்த திங்கள்கிழமை இரவு கனமழையின் காரணமாக அருகிலுள்ள சிசுரு ஆறு கரை உடைந்து பெருக்கெடுத்து ஓடியது.
இதன்போது அருகில் சுமார் நூறு மீட்டர் ஆழம் கொண்ட சட்டவிரோத தங்கச் சுரங்கம் ஒன்றில் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர்.
சுரங்கம் வெள்ளத்தில் மூழ்கியதால் தொழிலாளர்களும் உள்ளே சிக்கிக் கொண்டனர்.
உள்ளூர் மக்களும் சுரங்கத் தொழிலாளர்களும் ஆரம்பத்தில் தண்ணீரை வெளியேற்ற முயன்றனர். சுரங்கம் முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்குவதற்கு முன்பு 11 தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். ஆனால் நிலைமை கட்டுக்கடங்காமல் போனது.
இருப்பினும் இது சட்டவிரோத சுரங்கம் என்பதால், விபத்து குறித்து அதிகாரிகளுக்கு முதலில் தகவல் தெரிவிக்க தயக்கம் காட்டியுள்ளனர்.
விபத்து நடந்த 16 மணி நேரத்திற்குப் பிறகு காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. நேற்று காலை மீட்புப் பணி தொடங்கியது.
மீட்புப் பணியாளர்கள் சுரங்கத்திலிருந்து தண்ணீரை வெளியேற்ற நீருக்கடியில் இயங்கும் பம்புகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.
சுரங்கத்திற்குள் நிலத்தடி நீர் பாயும் துளைகளை அடைக்கும் முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன.
சுரங்கத்தில் நீர் மட்டம் இன்னும் குறையவில்லை. உயர்ந்த நீர் மட்டம், குறுகிய வழி, வழுக்கும் நிலப்பரப்பு மற்றும் மோசமான வெளிச்சம் ஆகியவை மீட்புப் பணிகளுக்குச் சவாலாக உள்ளன.
சுரங்கத்திற்குள் 30 முதல் 40 மீட்டர் ஆழத்தில் இருந்து இதுவரை 6 தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் 20 பேர் உள்ளே சிக்கியுள்ளதாக நம்பப்படுகிறது. அவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.