நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு... பீகாருக்கு எச்சரிக்கை - சிக்கிய 57 தமிழர்கள்!

காணாமல் போன 384 பேரில் குறைந்தது 105 பேர் இந்தியர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு... பீகாருக்கு எச்சரிக்கை - சிக்கிய 57 தமிழர்கள்!
Published on

திபெத் எல்லையருகே உள்ள நேபாளத்தின் வடக்கு ரசுவா மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால், வீடுகள், வாகனங்கள், பாலங்கள் மற்றும் உள்கட்டமைப்பு பகுதிகள் அடித்துச் செல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவற்றில் சிக்கி காணாமல் போன 384 பேரில் குறைந்தது 105 பேர் இந்தியர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 என தகவல் வெளியாகி உள்ளது. திபெத் மற்றும் நேபாளத்திற்கு இடையேயான எல்லையின் இருபுறமும் தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன, இதுவரை 12 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

57 தமிழர்கள்

இதனிடையே தமிழ்நாட்டில் இருந்து நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற 57 தமிழர்களும் அங்கு சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இரண்டு பேருந்துகளாக இவர்கள் சுற்றுலா சென்றநிலையில், ஒரு பேருந்தில் சென்ற 20 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், 37 பேரைத் தேடும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

நேபாளம் பெரு வெள்ளத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ள நிலையில், அவர்களின் நிலை குறித்து அறிய தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் துறை சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவுக்கான உதவி எண் - 1800 309 3793

வெளிநாடு உதவி எண்கள் +91 8069009901, 08069009901

மிஸ்டு கால் அழைப்புக்கு +91 8069009900 / 8069009900 ஆகிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பீகாருக்கு எச்சரிக்கை

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் பனிப்பாறை ஏரி வெடிப்பு மற்றும் நிலநடுக்கம் காரணமாக உருவான பெருவெள்ளத்தைத் தொடர்ந்து, பீகார் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களுக்கு இந்திய அரசு 'ஹை அலர்ட்' விடுத்துள்ளது.

நேபாள ஆறுகளின் நீர்வரத்து இந்தியாவிற்குள் பாயும் கண்டக் மற்றும் கோஷி நதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கை (சுமார் 3 மீட்டர் உயர அலைகள்) ஏற்படுத்தக்கூடும் என்பதால், எல்லையோர இந்திய மாவட்டங்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன.

முன்னெச்சரிக்கையாக வால்மீகிநகர் கண்டக் அணைக்கட்டின் 36 மதகுகளும் முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளன.

பீகார் முதலமைச்சர் சம்ராட் சவுத்ரி தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, நிலைமையைக் கண்காணிக்கத் தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி அடங்கிய உயர் மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

வெள்ளப்பெருக்குக்கு காரணம் என்ன?

நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவுக்கு வடக்கே உள்ள ரசுவாவில், இன்று அதிகாலையில் வெள்ளம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட பனிச்சரிவினால், உருகிய பனி போதே கோஷி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடியதே இதற்குக் காரணம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com