நிதி முறைகேடு - இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மனைவி கைது!

சிங்கப்பூரிலிருந்து இலங்கை திரும்பிய இரண்டு நாட்களில் கைது செய்யப்பட்டார்.
நிதி முறைகேடு - இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மனைவி கைது!
Published on: 

இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மனைவி சிராந்தி ராஜபக்சே (73) நிதி மோசடி மற்றும் முறைகேடு புகாரில், இலங்கையின் லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பால் கொழும்புவில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (அக்.7) கைது செய்யப்பட்டார்.

ஷிராந்தியின் சிரிலிய சவியா அறக்கட்டளையில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் புகார் தொடர்பான விசாரணையின் ஒருபகுதியாக இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

வழக்கின் பின்னணி

சிராந்தி ராஜபக்சே ‘சிரிலிய சவியா’ (Siriliya Saviya) என்ற அறக்கட்டளையை நடத்தி வந்தார். கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனைக்கு அதிநவீன சிடி ஸ்கேன் கருவி வாங்குவதற்காக இந்த அறக்கட்டளை மூலம் பொதுமக்களிடம் நிதி திரட்டப்பட்டது. இலங்கை மதிப்பில் சுமார் 10 மில்லியன் ரூபாய் திரட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் அந்த மருத்துவக் கருவியை சீன அரசாங்கமே இலங்கைக்கு இலவசமாக நன்கொடையாக வழங்கியதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து இந்த 10 மில்லியன் ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

கைது

மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றிருந்த சிராந்தி ராஜபக்சே திங்கள்கிழமை இலங்கை திரும்பிய நிலையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக முன்ஜாமின் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அந்த மனுமீதான விசாரணை அக்டோபர் 12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கைதுக்கு பிறகான விசாரணையைத் தொடர்ந்து அக்டோபர் 13 வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

மறுப்பு

சிராந்தி ராஜபக்சே தரப்பு இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. இந்த நிதி எதுவும் முறைகேடு செய்யப்படவில்லை என்றும், அறக்கட்டளையின் வங்கிக் கணக்கில் பத்திரமாக உள்ளதாகவும் மகிந்த ராஜபக்சேவின் செய்தித் தொடர்பாளர் மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.

தொடரும் கைது

மகிந்த ராஜபக்சே 2005 முதல் 2015 வரை இலங்கையின் அதிபராகப் பணியாற்றினார். 2022-ல் பணவீக்கம் அதிகரித்ததாலும், இலங்கையில் எரிபொருள், உணவு மற்றும் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டதாலும் நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.

இதனால் மகிந்த ராஜபக்சேவின் சகோதரரான கோட்டாபய ராஜபக்சே ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசு தற்போது நடந்து வருகிறது.

அனுர குமார திசநாயக்கவின் அரசு, ராஜபக்சே குடும்பத்தினர் மீதான ஊழல் வழக்குகளை தீவிரமாக கையிலெடுத்து விசாரித்து வருகிறது. மகிந்த ராஜபக்சேவின் மூத்த மகன் இந்தாண்டு தொடக்கத்தில் கைது செய்யப்பட்டநிலையில், தற்போது மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com