உயிருக்கு ஆபத்து என அச்சம்: பாதுகாப்பான இடத்திற்கு இடம் பெயர்ந்த ஹபீஸ் சயீத்- மசூத் அசார்

இந்தியாவில் நடத்தப்பட்ட பல பயங்கரவாத தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டவர் ஹபீஸ் சயீத்.
ஹபீஸ் சயீத்- மசூத் அசார்
ஹபீஸ் சயீத்- மசூத் அசார்
Published on: 

இந்தியாவில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர்-இ-தொய்பா தலைவர் ஹபீஸ் சயீத், ஜெய்ஷ்-இ-முகமது தலைவரான மசூத் அசார் ஆகியோர் பாகிஸ்தானில் இருக்கிறார்கள்.

பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்

ஐ.நா. சபையால் சர்வதேச பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள அவர்கள் பாகிஸ்தானில் சுதந்திரமாக திரிகிறார்கள். அவர்களை தேடுப்படும் குற்றவாளிகளாக இந்தியா அறிவித்து உள்ளது. இதற்கிடையே பாகிஸ்தானில் சமீப காலமாக மர்ம நபர்களால் இந்த இரு பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்தவர்கள் சுட்டு கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில் ஹபீஸ் சயீத்- மசூத் அசார் ஆகியோருக்கு இந்திய தாக்குதல் மற்றும் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு அச்சுறுத்தல் இருப்பதாக அவர்களை பாதுகாப்பான இல்லங்களுக்கு பாகிஸ்தான் உளவுத் துறையான ஐ.எஸ்.ஐ மாற்றி உள்ளது. இதை இந்திய உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

ஹபீஸ் சயீத், லாகூரின் ஜோஹர் டவுனில் உள்ள தனது வீட்டில் இருந்து, ராவல்பிண்டியில் பாகிஸ்தான் ராணுவத் தலைமையகத்திற்கு அருகே உள்ள உயர் பாதுகாப்பு கொண்ட கேரிசன் கிரவுண்ட் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அதேபோல் மசூத் அசார், சிந்து மாகாணத்தில் நவாப் ஷாவில் உள்ள ஒரு பலப்படுத்தப்பட்ட இடத்திற்கு மாற்றப்பட்டு உள்ளார். அவர்கள் பாகிஸ்தான் உளவுத்துறை நிர்வகிக்கும் பலத்த பாதுகாப்பு கொண்ட இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கட்டுப்பாடு

ஹபீஸ் சயீத் தற்போது லஷ்கர் அமைப்பின் உறுப்பினர்களை நேரில் சந்திப்பதைத் தவிர்த்துவிட்டு ஆடியோ மூலமாக மட்டுமே தொடர்பு கொள்கிறார். ஹபீஸ் சயீத்துக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர் வெளியே செல்வதற்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளித்த வழக்குகளில் ஹபீஸ் சயீத் லாகூரின் கோட்லக்பத் சிறையில் தண்டனை அனுபவித்து வருவதாக பாகிஸ்தான் தெரிவித்தது. ஆனால் அவர் பாதுகாப்பான இடத்தில் மிகவும் வசதியாக வாழ்ந்து வருகிறார்.

மசூத் அசாரும் தனது அமைப்பின் உறுப்பினர்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்வதைத் தவிர்த்து வருகிறார். அவர் முக்கிய தளபதிகள் சிலருடன் மட்டுமே தொடர்பில் உள்ளார். மசூத் அசார் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் அவர் ஆப்கானிஸ்தானுக்கு தப்பி சென்றுவிட்டார் என்றும் பாகிஸ்தான் கூறி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் முக்கிய உள்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

X