14 மாத திருமண வாழ்க்கை.. விவாகரத்து கோரும் ப்ரிட்னி-அஸ்கரி?

சமீப காலமாக இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக செய்திகள் வந்ததுமேலை நாடுகளில் ப்ரி நப்ஷல் ஒப்பந்தம் என்பது பரவலான ஒன்று
14 மாத திருமண வாழ்க்கை.. விவாகரத்து கோரும் ப்ரிட்னி-அஸ்கரி?
Published on

அமெரிக்காவை சேர்ந்தவர் 41 வயதாகும் பிரபல பாடகியான ப்ரிட்னி ஸ்பியர்ஸ் (Britney Spears). 1990களில் இருந்தே 'பாப் இசையின் ராணி' என வர்ணிக்கப்படும் இவரது இசைக்கு உலகெங்கிலும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

இவரும் ஸாம் அஸ்கரி (Sam Asghari) எனும் நடிகரும் 5 வருட காலம் ஒருவரையொருவர் விரும்பி வந்தனர். பிறகு 2022ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், சமீப காலமாக இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக செய்திகள் வந்தது.

இந்நிலையில் தங்களுக்கிடையே 'தீர்க்க முடியாத' கருத்து வேறுபாடுகள் தோன்றியுள்ளதாகவும், அதனால் இருவரும் பிரிய முடிவு செய்திருப்பதாகவும் அஸ்கரி தெரிவித்தார். இதனை தொடர்ந்து இருவரும் கடந்த ஜூலை 28 முதல் பிரிந்து விட்டதாக அறிவித்து, அஸ்கரி நேற்று விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார்.

மேலும் ஈட்டு தொகையையும், வழக்கறிஞர் கட்டணத்தையும் ப்ரிட்னி ஸ்பியர்ஸ் தான் தர வேண்டும் என்று தனது மனுவில் கோரியுள்ளார்.

விவாகரத்து கோரும் தம்பதியினருக்கு சொத்து பிரிவினை செய்யும் போது சிக்கல்கள் ஏற்படுவதனால், விவாகரத்து கிடைக்கும் காலம் நீள்வதும், இதனால் அவர்களின் எதிர்கால திட்டங்கள் தாமதமடைவதும் நடந்து வந்தது. இதனை தவிர்க்க திருமணத்திற்கு பிறகு ஒருவேளை விவாகரத்து ஏற்பட்டால், அதற்கு பிறகு பிரித்து கொள்ள வேண்டிய சொத்துக்கள் மற்றும் தங்கள் முன்னாள் மணத்துணை குறித்து எப்போதும் வெளியில் கருத்து கூறாமல் இருப்பது உள்ளிட்ட பல அம்சங்களை இணைத்து மேலை நாடுகளில் திருமணத்திற்கு முன்பாக ஒரு ஒப்பந்தம் செய்து கொள்கிறார்கள்.

'ப்ரி நப்ஷல் ஒப்பந்தம்' (pre-nuptial agreement) எனும் இதனை ப்ரிட்னி வலுவாக செய்திருப்பதாகவும் அதனால் விவாகரத்திற்கு பிறகும் தனது சொத்துக்களை காப்பாற்றி கொள்வார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ப்ரிட்னி ஸ்பியர்ஸின் சொத்து மதிப்பு சுமார் ரூ.498 கோடி ($60 million) ஆகும்.

பிரபலமானவர்களின் விவாகரத்து வழக்குகளை நடத்தும் லாரா வாஸ்ஸரை தனது தரப்பு வழக்கறிஞராக ப்ரிட்னி நியமித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரிட்னியின் புகைப்படங்களில் அவர் திருமண மோதிரத்தை அணியாமல் இருப்பது தெரிய வந்துள்ளது.

அவரது வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை எவ்வாறு அவர் அமைத்து கொள்ள போகிறார் என்பதை அறிந்து கொள்ள அவரது ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com