

அமெரிக்க இடைக்கால தேர்தலில் டிரம்ப்பின் குடியரசு கட்சி வெற்றி பெற எலான் மஸ்க் சுமார் சுமார் 276 மில்லியன் டாலரை (சுமார் 26,343 கோடி ரூபாய்) வழங்கியுள்ளார்.
வரும் நவம்பர் 3 அன்று, அமெரிக்கா முழுவதும் உள்ள அனைத்து 50 மாநிலங்களிலும் தேர்தல் நடைபெறவுள்ளது.
அமெரிக்க அதிபரின் பதவிக்காலம் 4 ஆண்டுகள் என்றாலும், நாடாளுமன்றத்தின் மக்கள் பிரதிநிதிகள் சபையின் ஆயுட்காலம் 2 ஆண்டுகள் மட்டுமே.
எனவே, அதிபர் பதவியேற்று 2 ஆண்டுகள் முடிவடையும் போது இடைக்கால தேர்தல் (Midterm Election) நடக்கிறது.
டிரம்ப் குடியரசு கட்சிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் கிடைக்கிறதா அல்லது எதிர்க்கட்சிக்கு கிடைக்கிறதா என்பதை இந்தத் தேர்தல் தீர்மானிக்கும்.
அமெரிக்கவில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் சபையின் மொத்தம் 435 இடங்களுக்கும், செனட் சபையில் மூன்றில் ஒரு பங்கு, அதாவது 35 இடங்களுக்கும் தேர்தல் நடக்க உள்ளது. மேலும் அமெரிக்காவின் 39 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை தேர்ந்தெடுக்க தேர்தல் நடக்க உள்ளது.
ஆளும் குடியரசுக் கட்சி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மையை இழந்தால், டிரம்ப் தனது மீதமுள்ள 2 ஆண்டு பதவிக்காலத்தில் புதிய சட்டங்களை கொண்டு வருவதிலும், திட்டங்களுக்கு நிதி ஒப்புதல் பெறுவதிலும் பெரும் சவால்களை சந்திக்க நேரிடும்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இடைகால தேர்தலில் குடியரசுக் கட்சி பிரதிநிதிகள் சபை மற்றும் செனேட் ஆகிய இரண்டிலும் பெரும்பான்மையைத் தக்கவைத்து கொண்டால், நாட்டின் ஒவ்வொரு வயது வந்த குடிமகனுக்கும் 5,000 டாலர் ( 4.4 லட்சம் ரூபாய்) வழங்கப்போவதாக அதிரடி வாக்குறுதியை அளித்திருக்கிறார்.
இந்த இடைகால தேர்தலில் தான் நேரடியாகப் போட்டியிடவில்லை என்றாலும், வாக்காளர்கள் வாக்கு செலுத்தும் இடத்தில் தனது பெயர் இருப்பதைப்போல கருதி குடியரசுக் கட்சிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
அமெரிக்காவில் உள்ள சுமார் 24.5 கோடி வயது வந்த குடிமக்களுக்கு தலா 5,000 டாலர் வழங்க வேண்டுமானால், அதற்குச் சுமார் 1 டிரில்லியன் டாலர் நிதி தேவைப்படும்.
தனது நிர்வாகம் விதித்துள்ள இறக்குமதி வரிகள் மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மூலமாகவே இது சாத்தியப்படும் என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
பணவீக்கம் மற்றும் ஈரான் உடனான போர் காரணமாக மக்களிடையே டிரம்ப் மீது அதிருப்தி நிலவுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்திய கருத்துக்கணிப்புகளில் நாட்டில் டிரம்பை ஆதரிப்போம் எண்ணிக்கை 30% ஆக சரிந்துள்ளது.
எதிர் தரப்பில் உள்ள ஜனநாயக கட்சியினர் இந்த அறிவிப்பை தேர்தலில் தோல்வியடைவோம் என்ற பயத்தில் டிரம்ப் அளித்துள்ள நம்பகத்தன்மையற்ற வாக்குறுதி என்று விமர்சித்து வருகின்றனர்.
இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த அமெரிக்கக் காங்கிரஸின் ஒப்புதல் அவசியமாகும். எனினும், நாட்டின் கடன் 40 டிரில்லியன் டாலரை தாண்டியுள்ள நிலையில் இது பொருளாதார ரீதியாகச் சாத்தியமற்றது என பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க், ஜூலை மாதம் முதல் குடியரசுக் கட்சிக் குழுக்களுக்கும் தனது சொந்த அரசியல் நடவடிக்கைக் குழுவிற்கும் குறைந்தது 276 மில்லியன் டாலரை (சுமார் 26,343 கோடி ரூபாய்) வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது.
இதன் மூலம், நவம்பர் 3 அன்று நடைபெறவிருக்கும் அமெரிக்க இடைத்தேர்தலில் அறியப்பட்ட மிகப்பெரிய நன்கொடையாளராக அவர் உருவெடுத்துள்ளார்.
அதிபர் டொனால்ட் டிரம்பின் கட்சிக்கு வளர்ந்து வரும் சவால்கள் இருந்தபோதிலும், காங்கிரஸின் கட்டுப்பாட்டை குடியரசுக் கட்சியினர் தக்கவைத்துக் கொள்ள உதவும் நோக்கில், 2026 தேர்தல் சுழற்சியில் மஸ்க்கின் மொத்த அரசியல் செலவு சுமார் 366 மில்லியன் டாலரை (ரூ. 34,976 கோடி) எட்டியுள்ளது என்று ராய்ட்டர்ஸ் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
மஸ்க்கின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்திய இந்த நன்கொடைகளில், குடியரசுக் கட்சி செனட் வேட்பாளர்களை ஆதரிக்கும் அரசியல் நடவடிக்கைக் குழுவான செனட் லீடர்ஷிப் ஃபண்டிற்கு 158 மில்லியன் டாலர் (ரூ. 15,103 கோடி) வழங்கப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்கா PAC-க்கு 76 மில்லியன் டாலரும் (ரூ. 7,265 கோடி), பிரதிநிதிகள் சபை தேர்தல்களில் குடியரசுக் கட்சியினரை ஆதரிக்கும் காங்கிரஷனல் லீடர்ஷிப் ஃபண்டிற்கு 20 மில்லியன் டாலரும் (ரூ. 1,912 கோடி) நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
2024 தேர்தல் காலகட்டத்தில், டிரம்ப் அதிபர் தேர்தலில் வெற்றிபெற உதவும் வகையில் மஸ்க் கிட்டத்தட்ட 290 மில்லியன் டாலர் (ரூ. 27,721 கோடி) செலவிட்டார்.
பின்னர், செலவுக் குறைப்பு முயற்சியான அரசாங்க செயல்திறன் துறைக்கு (DOGE) தலைமை தாங்குவதற்காக அவர் நிர்வாகத்தில் இணைந்தார்.
ஆனால், டிரம்புடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து அப்பொறுப்பிலிருந்து விலகினார். அதன் பிறகு டிரம்ப்பை பலமுறை விமர்சித்து வந்தார். ஆனால் தற்போது இருவரும் சமரசம் செய்துகொண்ட நிலையில், கடந்த வாரம் டிரம்ப், மஸ்க்கிற்கு தேசிய அறிவியல் பதக்கத்தை வழங்கினார்.