நேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 350-ஐ தாண்டியது

நேபாள அமைச்சரவையின் முக்கிய அவசரக் கூட்டத்தினை பிரதமர் பாலன் ஷா கூட்டினார்.
flood
Published on

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 356 ஆக அதிகரித்துள்ளது.

வடக்கு நேபாளத்தில் ஆற்றின் மேல் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக எல்லை நதி ஒன்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சாலைகள் மற்றும் மின்சாரக் கட்டமைப்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

கடும் சேதம்

திபெத் எல்லைக்கு அருகே ஏற்பட்ட திடீர் வெள்ளம், குடியிருப்புகள், வாகனங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை கடுமையாக சேதப்படுத்தியது.

வெள்ளப் பெருக்கினால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்கும், தற்போதைய நிலவரத்தை ஆய்வு செய்வதற்கும் அமைச்சரவையின் முக்கிய அவசரக் கூட்டத்தினை நேபாள பிரதமர் பாலன் ஷா கூட்டினார்.

ஹெலிகாப்டரில் மீட்புப்பணி

வெள்ளத்தில் சிக்கிய பகுதிகளுக்குச் செல்லும் சாலைகள் மற்றும் பாலங்கள் சேதம் அடைந்ததால் பல இடங்களில் ஹெலிகாப்டர் மூலம் மீட்புப்பணி மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

போட்டே கோஷி மற்றும் திரிசூலி ஆற்றுப் படுகைகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும், பாதுகாப்பான இடங்களுக்கு விரைந்து செல்லுமாறும் அதிகாரிகள் வலியுறுத்தினர்.

356 பேர் பலி

இந்நிலையில், நேபாளத்தில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 356 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் நூற்றுக்கணக்கானோரின் நிலை என்னவென தெரியவில்லை.

நேபாளம் மற்றும் திபெத் பகுதியில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் மாயமாகி உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

நேபாள அரசுடன் சேர்ந்து இந்திய விமானப்படையும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. மோசமான வானிலை மற்றும் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு உள்ளதால் தேடுதல் மற்றும் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com