சவுதியில் தம்பதிக்கு மரண தண்டனை: இந்தியர் வீடியோ எடுத்ததாகப் பரவும் தகவல் உண்மையா?

பாகிஸ்தானைச் சேர்ந்த தனிநபர்கள்தான் இந்தச் செய்திகளை முதன்முதலில் திட்டமிட்டுப் பரப்பியுள்ளனர்.
Mosque of Mecca
Published on: 
Summary

சவுதி அரேபியாவில் பங்களாதேஷைச் சேர்ந்த தம்பதியர் தூக்கிலிடப்பட்ட விவகாரம் இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் இந்தியர் ஒருவர் மீது பழி சுமத்தும் வகையில் பாகிஸ்தானைச் சேர்ந்த நபர்களால் திட்டமிடப்பட்ட வதந்திகள் பரப்பப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மெக்கா நகரில் முறையற்ற செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பெயரில், பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த நஸ்ருல் இஸ்லாம் அப்துல் பஷிர் மற்றும் ஸ்வீட்டி அக்தர் ஆகிய இருவரையும் சவுதி அரேபிய அரசு தூக்கிலிட்டது. இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு ஒரு வாரத்திற்கு மேலாகியும், அது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் அல்லது அவர்களின் உடல் சொந்த நாட்டிற்கு அனுப்பப்படுவது குறித்து சவுதி தரப்பிலிருந்து முறையான அறிவிப்புகள் வெளியாகவில்லை. இதனால் பங்களாதேஷ் அரசும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்தியர் மீது வீண் பழி

இந்த மரண தண்டனைச் சம்பவம் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், தூக்கிலிடப்பட்ட தம்பதியரை ஒரு இந்தியர்தான் வீடியோ எடுத்ததாகவும், அதனால்தான் அவர்களுக்குத் தண்டனை கிடைத்தது என்றும் கூறி சமூக வலைதளங்களில் அவதூறுகள் பரப்பப்பட்டு வருகின்றன. குறிப்பாகப் பாகிஸ்தானைச் சேர்ந்த தனிநபர்கள்தான் இந்தச் செய்திகளை முதன்முதலில் திட்டமிட்டுப் பரப்பியுள்ளனர். எந்தவித ஆதாரமும் இல்லாமல் பரப்பப்படும் இந்தத் தகவல்கள், இந்தியாவுக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான உறவைச் சீர்குலைக்கும் நோக்கத்துடன் திட்டமிடப்பட்ட தீய பிரசாரம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

சவுதியின் ரகசியப் போக்கு

இந்த விவகாரத்தில் சவுதி அரேபியா நீதிமன்றம் குற்றச்சாட்டுகள் குறித்த விரிவான விவரங்களை வெளியிடாமல் இருப்பது சர்வதேச அளவில் கேள்விகளை எழுப்பியுள்ளது. மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்பு பங்களாதேஷ் அரசுக்கு முறையான தகவல் தெரிவிக்கப்படாததும், டாக்காவின் தூதரகங்கள் உடனடியாகத் தலையிட்டுத் தடுத்து நிறுத்தத் தவறியதும் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. சவுதி அரசின் வெளிப்படைத்தன்மையற்ற நடவடிக்கைகளும், சமூக வலைதளங்களில் வதந்திகளைப் பரப்பி அரசியல் லாபம் தேடும் சதிகளும் தற்போதைய சூழலில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com