

இந்தோனேசிய துணை அதிபர் ஜிப்ரான் ரகாபுமிங் ராகா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இந்தோனேசியாவில் 2024 இல் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் பிரபோவோ சுபியாண்டோ அதிபர் வேட்பாளராக களமிறங்கினார். துணை அதிபர் வேட்பாளராக ஜிப்ரான் களமிறக்கப்பட்டார்.
ஜிப்ரான், பிரபோவோவின் அரசியல் போட்டியாளரும் முன்னாள் அதிபருமான ஜோகோ விடோடோவின் மூத்த மகன் ஆவார்.
ஜோகோவிக்கும் பிரபோவோவுக்கும் இடையிலான ஏற்பட்ட கூட்டணியின் ஒரு பகுதியாக ஜிப்ரான் துணை அதிபர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.
அப்போது ஜிப்ரானுக்கு 36 வயதாக இருந்தது. அரசியலமைப்பு நீதிமன்றத்தின் சர்ச்சைக்குரிய தீர்ப்பின் மூலம் வேட்பாளர்களுக்கான 40 வயது குறைந்தபட்ச வயது வரம்பிலிருந்து அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டதால், அவர் தேர்தலில் போட்டியிடத் தகுதி பெற்றார்.
அத்தேர்தலில் வென்று, பிரபோவோ அதிபரானார். ஜிப்ரான் துணை அதிபரானார். ஆனால் அண்மை காலமாக ஜிப்ரானின் தந்தை ஜோகோ மற்றும் அதிபர் பிரபோவோ கூட்டணியில் பிளவு நிலவுகிறது.
ஜிப்ரானுக்கும் அதிபர் பிரபோவோவுக்கும் இடையேயும் கருத்து வேறுபாடுகள் உள்ளன.
இதனிடையே ஜோகோவின் தீவிர ஆதரவாளரும் அதிபரின் தலைமை ஊழியருமான லிஸ்டோ சிகீத் அதிபர் பிரபோவோ மற்றும் அமைச்சர்களின் தொலைபேசி உரையாடல்களை சட்டவிரோதமாக ஒட்டுக்கேட்டதாக கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். தனது பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டார்.
இதற்கிடையில், ஜோகோவியின் இளைய மகன் கேசாங் பங்கரேப் தலைமையிலான இந்தோனேசிய சாலிடாரிட்டி கட்சியில் இருந்து, பிரபோவோவின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள மூன்று உறுப்பினர்கள் திங்களன்று ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்தனர்.
அமைச்சரவை பொறுப்பில் கவனம் செலுத்த கட்சியில் இருந்து விலகும் முடிவை எடுத்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
இந்த தொடர் நிகழ்வுகள், பிரபோவா மற்றும் ஜோகோ கூட்டணியில் விரிசல்கள் ஏற்படுவதற்கான அறிகுறியாகவும் பார்க்கப்பட்டது.
இதனிடையே துணை அதிபர் ஜிப்ரான் ரகாபுமிங் ராகா, 2024 தேர்தல் பிரச்சாரத்தின் போது பயன்படுத்திய உயர்நிலைப் பள்ளி பட்டயச் சான்றிதழ் செல்லாது என உச்ச நீதிமன்றம் கடந்த அக்டோபர் 31 தீர்ப்பளித்தது.
நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, 100க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜிப்ரானுக்கு எதிரான நாடாளுமன்ற நடவடிக்கையை ஆதரித்தனர்.
இந்த நடவடிக்கை, அவரைத் துணை அதிபர் பதவியிலிருந்து நீக்கும் செயல்முறைக்கு வழிவகுக்கும் என கருதப்படுகிறது.
இதைத் தொடர்ந்து அவரின் ராஜினாமா நிகழ்ந்துள்ளது.
ஜிப்ரானின் உதவியாளரான புடி ஆரி, நேற்று அதிபர் பிரபோவோவிடம் நேரடியாக ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார். இருப்பினும், அந்த ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதா என்பது குறித்து இன்னும் தகவல் இல்லை.
துணை அதிபராவதற்கு தேவையான மேல்நிலைப் பள்ளிக் கல்வியையோ அல்லது அதற்கு இணையான கல்வியையோ ஜிப்ரான் முடித்திருந்தாரா என்பது நீண்ட காலமாகவே ஒரு சர்ச்சைக்குரிய விஷயமாக இருந்து வருகிறது.
சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவில் கல்வி பயின்ற அவர், தனது கல்வித் தகுதிகளை நிரூபிக்க சமர்ப்பித்த சான்றிதழ்கள் போதிய ஆதாரமாக இல்லை என என அக்டோபர் 31 அன்று அளித்த தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் கூறியது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவும், தனது கல்வித் தகுதிகளின் செல்லுபடியை நிரூபிக்கவும் அனுமதிக்குமாறு அவர் உச்ச நீதிமன்றத்தை கோரியிருந்தார். இதனிடையே அவரின் ராஜினாமாவும் வந்துள்ளது.