பெல்ஜியத்தில் கூகுள் நிறுவனத்தின் சட்டவிரோத ஏஐ டேட்டா சென்டர் கட்டுமானம் நிறுத்தம்!

உலகளவில் சுமார் 13,500 தரவு மையங்கள் உள்ளன. இவற்றில், 54 பெல்ஜியத்தில் அமைந்துள்ளன.
ஏஐ டேட்டா சென்டர்
ஏஐ டேட்டா சென்டர்
Published on: 
Summary

பெல்ஜியத்தில் கூகுள் நிறுவனத்தின் சட்டவிரோத டேட்டா சென்டர் கட்டுமானம் நிறுத்தப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியின் ஒரு பகுதியாக உலகம் முழுவதும் தரவு மையங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

ஆனால் அவற்றை இயக்குவதற்கு தேவைப்படும் பெருமளவிலான ஆற்றல் மற்றும் நீர் காரணமாக, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் உள்ளூர் மக்களிடமிருந்து பரவலான எதிர்ப்புகளை அவை சந்தித்து வருகின்றன.

பெல்ஜியம்

இந்நிலையில் முறையான அனுமதி இன்றி மேற்கொள்ளப்பட்டு வந்த சட்டவிரோத செயற்கை நுண்ணறிவு தரவு மையத்தின் கட்டுமானப் பணிகளை கூகுள் நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது.

பெல்ஜியத்தின் பார்சியன்ஸ் நகரில் கூகுளின் ஏஐ செயற்கை நுண்ணறிவு தரவு மையம் நடந்து வந்தது.

ஆனால் இந்த மையம் முறையான திட்டமிடல் அனுமதி இல்லாமல் கட்டப்படுவதாக பெல்ஜிய அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சர்ச்சை

கூகுள் தனது திட்ட அனுமதியின் நிபந்தனைகளை மாற்ற விண்ணப்பித்தபோது இந்த சர்ச்சை தொடங்கியது.

தனது சர்வர்களை குளிர்விக்க காற்றைப் பயன்படுத்துவதிலிருந்து, அருகிலுள்ள சாம்ப்ரே நதியிலிருந்து எடுக்கப்படும் நீரைக் கொண்டு குளிர்விப்பதே கூகுளின் திட்டமாக இருந்தது.

இருப்பினும், அப்பகுதியில் நிலவும் வறட்சி மற்றும் தண்ணீர் பற்றாக்குறையை காரணம் காட்டி, உள்ளூர் அதிகாரிகள் அந்த விண்ணப்பத்தை நிராகரித்தனர்.

சட்டவிரோதம்

அனுமதி மறுக்கப்பட்ட போதிலும் அந்த இடத்தில் தொடரும் கட்டுமானப் பணிகள், உள்ளூர் மக்களையும் சுற்றுச்சூழல் குழுக்களையும் கோபப்படுத்தியது.

அரசாங்க செய்தித் தொடர்பாளர் நிக்கோலஸ் யெர்னோ, இந்தக் கட்டிடம் கடுமையான சட்ட மீறல் என்றும், சுமார் மூன்று ஹெக்டேர் பரப்பளவில் சட்டவிரோதமாக கட்டப்பட்டு வருவதாகவும் கூறினார்.

"அனுமதியின்றி கூகுள் தொடர்ந்து கட்டுமானப் பணிகளை மேற்கொள்வது, சுற்றுச்சூழலுக்கும், உள்ளூர் மக்களுக்கும், சட்ட அமைப்புக்கும் செய்யப்படும் அவமதிப்பாகும்" என்று கிரீன்பீஸ் பெல்ஜியத்தின் பிரதிநிதியான ஜோரி தைஸ் கூறினார்.

காலநிலை மாற்றத்தின் அதிகரித்து வரும் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, அதிக ஆற்றலை பயன்படுத்தும் இதுபோன்ற தரவு மையங்களின் கட்டுமானத்தை கவனிக்காமல் விட முடியாது என்றும் அவர் மேலும் கூறினார்.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்த விவகாரம் குறித்த விசாரணைக்கு நீதிமன்றம் திட்டமிட்டுள்ளது.

நிறுத்தம்

இதையடுத்து கட்டுமானப் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூகுள் நிறுவனம் நிறுத்திவைத்துள்ளது.

உள்ளூர் அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களுக்கு இணங்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கூகுள் தெரிவித்துள்ளது.

உள்ளூர் அதிகாரிகளுடன் வெளிப்படையான கலந்துரையாடல்களுக்கு தயாராக இருப்பதாகவும் அந்நிறுவனம் கூறியது.

கூகுள் தனது அறிக்கையில், தாங்கள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பெல்ஜியத்தில் செயல்பட்டு வருவதாகவும், உள்ளூர் சட்டங்களை முழுமையாக கடைப்பிடிக்க உறுதிபூண்டுள்ளதாகவும் தெரிவித்தது.

உலகை அச்சுறுத்தும் டேட்டா சென்டர்கள்

டேட்டா சென்டர் மேப் தகவலின்படி, உலகளவில் சுமார் 13,500 தரவு மையங்கள் உள்ளன. இவற்றில், 54 பெல்ஜியத்தில் அமைந்துள்ளன.

அமெரிக்காவில்தான் அதிகபட்சமாக 5,200க்கும் மேல் தரவு மையங்கள் உள்ளன. தரவு மையங்களின் கட்டுப்பாடற்ற பரவல், அமெரிக்க இடைக்காலத் தேர்தல்களிலும் ஒரு முக்கிய விவாதப் பொருளாக இருந்தது.

தரவு மையங்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகளைக் கோரிய மூன்று ஜனநாயகக் கட்சி செனட்டர்களையும் ஆளுநர்களையும் வாக்காளர்கள் தேர்ந்தெடுத்திருப்பது இப்பிரச்சனையில் பொதுமக்களின் கோபத்தை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது.

X