

காங்கோ நாட்டில் உள்ளூர் கிளர்ச்சி குழுக்களுடன் போர் திவிரமடைந்து வரும் சூழலில், ராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் மூத்த ராணுவ அதிகாரிகள் உட்பட 14 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
காங்கோ குடியரசு நாட்டின் கிழக்கு பகுதியில், ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 என்ற கிளர்ச்சியாளர்களுடன், காங்கோ ராணுவம் தொடர்ந்து போரில் ஈடுபட்டு வருகிறது.
இந்த தொடர் தாக்குதலில், காங்கோவில் பல முக்கிய நகரங்களை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர்.
இந்த சூழலில், காங்கோவின் தென்மேற்கு பகுதியில் உள்ள கிக்விட்டில் இருந்து, தலைநகர் கின்ஷாசாவுக்கு ராணுவ விமானம் ஒன்று திரும்பிக் கொண்டிருந்தது.
இந்த விமானத்தில் ராணுவ நீதிமன்றத்தின் தலைவரான லெப்டினண்ட் ஜெனரல் முடம்போ கடலாயி தியெண்டே, ஆயுதப் படைகளின் தலைமை தணிக்கையாளரான லெப்டினண்ட் ஜெனரல் பக்குமி லிகுலியா மற்றும் ராணுவ அதிகாரிகள் பயணம் செய்துள்ளனர்.
இதையடுத்து இன்று ஏற்பட்ட விமான விபத்தில் அதிகாரிகளும், தூதுக்குழுவை சேர்ந்த 12 உறுப்பினர்களும் உயிரிழந்துள்ளதாக காங்கோ ராணுவ செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் எஃபோமி எகெங்கே தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணை நடத்தி வருவதாக கூறியுள்ளார்.
இந்த விபத்து குறித்து காங்கோ சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் வாரியத் தலைவர் ட்ரைஃபோன் கின்-கீ முலும்பா கூறுகையில், விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.