

கொலம்பியாவின் கார்டஹேனாவில் மர்ம நபர்கள் சூப்பர் மார்கெட்டுக்குள் புகுந்து சுமார் 30 பேரைப் பணயக்கைதிகளாக பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
லத்தீன் அமெரிக்க நாடான கொலம்பியாவின் பிரபலமான சுற்றுலா நகரம் கார்டஹேனா.
நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை கார்டஹேனாவின் லா காஸ்டெல்லானா பகுதியில் துப்பாக்கி ஏந்திய கும்பல் ஒன்று ஒரு கவச வாகனத்திலிருந்து பணத்தைக் கொள்ளையடிக்க மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது.
பாதுகாப்புப் பணியாளர்கள் அபாயப் பொத்தானை அழுத்தியபோது காவல்துறைக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
காவல்துறையிடமிருந்து தப்பிக்கும் முயற்சியில், துப்பாக்கி ஏந்தியவர்கள் அருகிலுள்ள 'எக்ஸிடோ' சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்து, ஊழியர்களையும் வாடிக்கையாளர்களையும் பணயக்கைதிகளாகப் பிடித்தனர்.
தகவல் கிடைத்ததும், காவல்துறை மற்றும் ராணுவ சிறப்புப் படைகள் உடனடியாக பல்பொருள் அங்காடியைச் சுற்றி வளைத்தன.
சுற்றியுள்ள கட்டிடங்களில் ஸ்னைப்பர்களும் நிறுத்தப்பட்டனர்.
அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையின் விளைவாக, தாக்குதல் நடத்தியவர்கள் முதலில் 5 மூதாட்டிகளையும், பின்னர் மேலும் 5 பேரையும் விடுவித்தனர்.
சுமார் 20 பேர் இன்னும் பணயக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து பேசிய கொலம்பிய அதிபர் அபெலார்டோ டி லா எஸ்பிரியெல்லா, இவர்கள் சாதாரண குற்றவாளிகளே தவிர, பயங்கரவாதிகள் அல்ல என்று விளக்கமளித்தார்.
மீதமுள்ள பணய கைதிகளை பாதுகாப்பாக மீட்க அதிகாரிகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.