

நேபாளத்தில் சுரங்கப்பாதையில் சிக்கிய சீன நாட்டவர் ஒருவர் 10 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்டப்பட்ட அதிசயம் நிகழ்ந்துள்ளது.
நேபாளத்தில் கடந்த வாரம் புதன்கிழமை (ஆகஸ்ட் 26 ) ரசுவா மாவட்டத்தில் உள்ள கோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளபெருக்கில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,344 ஆக உயர்ந்துள்ளது. 5,500 க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர்.
சீனா-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பிரம்மாண்ட பனிப்பாறை சரிவு காரணமாக நேபாளத்தில் இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.
நேபாள வரலாற்றிலேயே மிக மோசமான இயற்கை பேரிடர்களில் ஒன்றாக இது மாறியுள்ளது.
மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இடிபாடுகளுக்கு இடையே பல நாட்களாக சிக்கியிருந்தவர்கள் உயிருடன் மீட்கப்படுவது நம்பிக்கையை வழங்கியுள்ளது. நேற்று 10 நாட்களாக உயிரை கையில் பிடித்து காத்திருந்த மூதாட்டி ஒருவர் மீட்கப்பட்டார்.
இந்த வெள்ளப்பெருக்கால் குறைந்தது 12 நீர்மின் திட்ட கட்டுமானங்கள் முற்றிலுமாகச் சேதமடைந்தன.
கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் சுரங்கப்பாதைகளுக்குள்ளும் வேலை தளங்களிலும் சிக்கியுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று 'திரிசூலி 3A' சுரங்கப்பாதையில் இருந்து இரண்டு நேபாளத் தொழிலாளர்களும் உயிருடன் மீட்கப்பட்டனர்.
இந்நிலையில் சுரங்கப்பாதையிலிருந்து சீன நாட்டவர் ஒருவர் 10 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ள அதிசயம் நிகழ்ந்துள்ளது.
நேபாள ராணுவம் மற்றும் சர்வதேச மீட்புக் குழுவினர் இணைந்து நடத்திய மீட்பு நடவடிக்கையில், ரசுவா மாவட்டத்தில் உள்ள 'அப்பர் திரிசூலி-1' நீர்மின் திட்ட சுரங்கப்பாதைக்குள் இருந்து லூஹைடாவோ என்ற சீன நாட்டவர் மீட்கப்பட்டார்.
சுரங்கப்பாதையின் 225 மீட்டர் ஆழத்தில் பாறைகள், மண் மற்றும் சேறுகளுக்கு நடுவே இவர் சிக்கியிருந்தார்.
10 நாட்களாக உள்ளே சிக்கியிருந்த அவர் உடல் முழுவதும் சேறு அப்பிய நிலையில் நேற்று மீட்கப்பட்டார்.
அவர் ஆரோக்கியமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதலுதவிக்குப் பின் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.