

ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனின் ஓஷாட்பேங்க தொடுத்துள்ள முதலீட்டு ஒப்பந்த வழக்கில், இந்தியாவின் முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டை ரஷ்யா தனது மத்தியஸ்தராக நியமித்துள்ளது.
கடந்த 2022-ல் உக்ரைன்மீது ரஷ்யா தாக்குதலைத் தொடுத்தது. இதனால் ரஷ்யா ஆக்கிரமித்துள்ள உக்ரைனின் சில பகுதிகளில் உள்ள பல நூறு மில்லியன் டாலர்கள் மதிப்புடைய தங்களது வங்கிக் கிளைகள், சொத்துக்களை இழந்துள்ளதாகவும், அங்கு எந்தவிதமான வங்கி செயல்பாடுகளையும் மேற்கொள்ள முடியவில்லை எனவும் ஓஷாட்பேங்க் குற்றம் சாட்டியுள்ளது.
இந்நிலையில் 1998 ஆம் ஆண்டு உக்ரைன் - ரஷ்யா இடையே கையெழுத்தான இருதரப்பு முதலீட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ் இந்த வழக்கை ஓஷாட்பேங்க் தொடர்ந்துள்ளது.
1998 ஒப்பந்தம் என்பது உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான 'இருதரப்பு முதலீட்டு பாதுகாப்பு ஒப்பந்தம்' (Bilateral Investment Treaty - BIT) ஆகும்.
இரு நாடுகளின் முதலீட்டாளர்களும் மற்றொரு நாட்டின் எல்லைக்குள் செய்யும் முதலீடுகளைப் பாதுகாப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். இந்த ஒப்பந்தத்தில் உள்ள 3 முக்கிய விதிகளை ரஷ்யா மீறியுள்ளதாக உக்ரைனின் ஒஸ்சாட்பேங்க் குற்றம் சாட்டியுள்ளது.
ஒப்பந்தத்தின்படி ஒரு நாட்டின் அரசு, மற்றொரு நாட்டு முதலீட்டாளரின் சொத்துக்களை முறையான பொதுக் காரணம் மற்றும் சட்ட நடைமுறைகள் இல்லாமல் தன்னிச்சையாகக் கைப்பற்றக் கூடாது. அப்படியே கைப்பற்றினாலும் அதற்குத் தகுந்த இழப்பீடு உடனே தர வேண்டும்.
டோனெட்ஸ்க், லுகான்ஸ்க் போன்ற உக்ரைன் பகுதிகளில் இருந்த தங்களது வங்கிக் கிளைகளையும், பணச் சொத்துக்களையும் எந்தவித இழப்பீடும் தராமல் ரஷ்யா சட்டவிரோதமாகப் பறிமுதல் செய்துள்ளது.
2. மற்றொரு நாட்டு முதலீட்டாளர்களின் வணிகச் செயல்பாடுகளுக்குப் பாதுகாப்பான மற்றும் நியாயமான சூழலை இரு நாடுகளும் ஏற்படுத்தித் தர வேண்டும்.
ரஷ்யா போர் தொடுத்ததோடு மட்டுமல்லாமல், தங்களின் வங்கிச் சேவைகளை முற்றிலும் முடக்கி, நியாயமற்ற முறையில் தங்களது வணிக உரிமைகளைப் பறித்துள்ளது.
3. போர், கலவரம் அல்லது அவசரநிலைக் காலங்களில் ஏற்படும் சொத்து இழப்புகளுக்குப் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.
தங்களுக்கு ஏற்பட்ட பல நூறு மில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்து இழப்புகளுக்கு ரஷ்யா எந்தவொரு இழப்பீடும் தர மறுத்து, ஒப்பந்தத்தை மீறியுள்ளது.
என்ற மூன்று முக்கியக் குற்றச்சாட்டுகளை உக்ரைன் முன்வைத்துள்ளது.
டோனெட்ஸ்க், லுகான்ஸ்க், கெர்சன் மற்றும் ஜபோரிஷியா ஆகியவை தற்போது பாதிக்கப்பட்ட பகுதிகளாக உள்ளன. 2022 இல் ரஷ்யா போர் தொடுத்த பிறகு, உக்ரைனின் இந்த 4 முக்கியப் பகுதிகளில் இருந்த தங்களின் பெரும்பாலான வங்கிக் கிளைகள், நிதிச் சொத்துக்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை ரஷ்யா சட்டவிரோதமாகக் கைப்பற்றிவிட்டதாக ஓஷாட்பேங்க் குற்றம் சாட்டியுள்ளது.
தங்களுக்கு ஏற்பட்ட அனைத்து இழப்புகளுக்கும் ரஷ்யாவிடம் இருந்து தகுந்த, விரைவான மற்றும் பயனுள்ள நிதி இழப்பீடு வேண்டும் என்று வங்கி கோரியுள்ளது.
ஓஷாட்பேங்க் ரஷ்யாமீது சர்வதேச மத்தியஸ்த தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருப்பது இது முதல்முறையல்ல. கடந்த 2014ம் ஆண்டும், கிரீமியா பகுதியை ரஷ்யா இணைத்தபோதும், அங்குள்ள சொத்து இழப்புக்காக இந்த வங்கி சர்வதேசத் தீர்ப்பாயத்தை நாடியது.
ஓஷாட்பேங்க் வங்கி முதலில் 2025 ஜூலையில் ரஷ்யாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு ரஷ்யா பதில் அளிக்காததால், ஏப்ரல் 7ம் தேதி அன்று இந்த சர்வதேச மத்தியஸ்த நடைமுறையை முறைப்படி தொடங்கியது.
இந்த வழக்கிற்காகவே 3 பேர்கொண்ட சர்வதேச நடுவர் குழு உருவாக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவில்தான் ரஷ்யாவின் மத்தியஸ்தராக இந்திய உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் நியமிக்கப்பட்டுள்ளார்.
உக்ரைன் சார்பில், ஸ்டாவ்ரோஸ் பிரெகோலாகிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மூன்றாவதாக இருநாடுகளும் சேர்ந்து தேர்ந்தெடுத்த கோஸ்டாரிகா நாட்டின் முன்னாள் வர்த்தக அமைச்சர் டியாலா ஜிமினெஸ். இவர் இந்தத் தீர்ப்பாயத்தின் தலைவராகச் செயல்படுவார்.
முன்னதாக, ஜெர்மனியின் எரிசக்தி நிறுவனம் (Wintershall Dea) மற்றும் உக்ரைனின் மின்சார நிறுவனம் (Ukrenergo) தொடர்பான சர்வதேச வழக்குகளில் ரஷ்யா தனது மத்தியஸ்தராகச் செயல்பட சந்திரசூட்டை அணுகியபோது அவர் அதை நிராகரித்திருந்தார்.
ஆனால், தற்போதைய புதிய வழக்கில் ரஷ்யாவின் கோரிக்கையை ஏற்று அவர் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இருநாடுகளும் போர்நிறுத்தத்தை உடனே மேற்கொண்டு, பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண இந்தியா கூறிவருகிறது. ஆனால் ரஷ்யாவை வெளிப்படையாக கண்டிப்பதை தவிர்ப்பதோடு, மாஸ்கோவை விமர்சிக்கும் பல ஐ.நா. தீர்மானங்கள் மீதும் வாக்களிக்காமல் விலகி வருகிறது.
2022 செப்டம்பரில் ரஷ்யா, டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க், கெர்சன் மற்றும் சபோரிஷியா ஆகிய பகுதிகளை இணைப்பதாக அறிவித்த பிறகு, ரஷ்யாவின் இந்த இணைப்பு முயற்சியைக் கண்டித்து ஐ.நா. பாதுகாப்பு சபையில் கொண்டுவரப்பட்ட அமெரிக்க-அல்பேனியத் தீர்மானத்தின் மீது இந்தியா வாக்களிக்காமல் விலகியது.