

சிங்கப்பூரைச் சேர்ந்த அதீனா லியாங் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த செவி ஸ்விப்ட் ஆகிய இருவரே இந்த அசாத்திய சாதனையை நிகழ்த்திய கூட்டாளிகள்.
உலகிலேயே வணிகரீதியாக விற்பனை செய்யப்படும் மிகப்பெரிய 2D லெகோ செட் என்ற பெருமையைப் பெற்றது 'லெகோ வேர்ல்டு மேப்'.
மொத்தம் 11,695 சிறிய பாகங்களைக் கொண்ட இந்த பிரம்மாண்ட உலக வரைபடத்தை, அமெரிக்காவின் கலிபோர்னியா பே ஏரியாவைச் சேர்ந்த இரண்டு நண்பர்கள் வெறும் 5 மணி நேரத்திற்குள் முழுமையாகக் கட்டமைத்து புதிய கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் 12 அன்று, கலிபோர்னியாவில் உள்ள 'பிரிக் பை பிரிக் டாய்ஸ்' என்ற லெகோ கடையில் இந்த உலக சாதனை முயற்சி நடைபெற்றது.
லெகோ உலக வரைபடத்தை மிக வேகமாகக் கட்டமைத்த இருவர் அடங்கிய குழு என்ற பிரிவின் கீழ், இவர்கள் இருவரும் இணைந்து 4 மணி நேரம் 59 நிமிடங்களில் 51 வினாடிகளில் இந்த வரைபடத்தை முழுமையாக முடித்து சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தனர்.
இதற்கு முன்னதாக, கடந்த 2023-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிளாரி ஃபர்காஷ் என்பவர் தனிநபராக இந்த வரைபடத்தை 7 மணி நேரம் 9 நிமிடங்கள் 41 வினாடிகளில் முடித்ததே சாதனையாக இருந்தது.
தற்போது அதீனா மற்றும் செவி ஜோடி, இருவராக இணைந்து அந்த நேரத்தை 5 மணி நேரத்திற்கும் குறைவாகக் குறைத்துள்ளனர். தனிநபர் பிரிவில் கிளாரியின் சாதனை இன்னும் அப்படியே நீடிக்கிறது.
இந்த சாதனை முயற்சி குறித்து அவர்கள் அளித்த பேட்டியில், தங்களின் உத்தி குறித்துப் பகிர்ந்துள்ளனர். 'வரைபடத்தில் உள்ள நாடுகளை அவற்றின் வண்ணங்களின் அடிப்படையில் மிக சாதுரியமாகப் பிரித்துக் கொண்டனர்.
ஒவ்வொரு வண்ணப்பகுதியையும் தனித்தனியாக வேகமாகச் செய்து முடித்துவிட்டு, பின்னர் புதிர்களை இணைப்பது போல உலக வரைபடத்தின் பிரதான பலகையில் அவற்றை ஒன்றாக இணைத்தனர். இந்த சாதனை முயற்சிக்கு முன்னதாக சுமார் ஒரு மாத காலம் இருவரும் இதற்காகத் தீவிரமாகப் பயிற்சி மேற்கொண்டுள்ளனர்' என்றும் தெரியவந்துள்ளது.
லெகோ விளையாட்டின் மீது கொண்ட தீராப் பற்றே தங்களை இணைத்ததாக இந்த நண்பர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அதீனா கூறுகையில், "சிறுவயதில் என் கற்பனைத் திறனை வளர்க்க லெகோ பெரிதும் உதவியது. ஒரு வருடத்திற்கு முன்பு நான் செவியை சந்தித்தபோது, லெகோ மீதான எங்கள் பொதுவான காதல் எங்களை சிறந்த நண்பர்களாக்கியது. எங்கள் நட்பைக் கொண்டாட கின்னஸ் சாதனையை விடச் சிறந்த வழி எதுவுமில்லை," என்றார்.
அவரைத் தொடர்ந்து பேசிய செவி, "லெகோ எப்போதும் எனக்கு ஒரு தனிநபர் விளையாட்டாகவே இருந்தது. ஆனால், என்னுள்ளே இருக்கும் குழந்தையையும், அதீனாவுக்குள் இருக்கும் குழந்தையையும் ஒன்றாக இணைக்க இந்த முயற்சி ஒரு பாலமாக அமைந்தது. இந்த கின்னஸ் சாதனை எங்களின் கூட்டு அடையாளமாக இருக்கும்" என்றும் நெகிழ்ந்துள்ளார்.
லெகோ பிரியர்களையும், மாஸ்டர் பில்டர்களையும் வியப்பில் ஆழ்த்திய இவர்களது சாதனையைப் பாராட்டி, கின்னஸ் உலக சாதனை நிறுவனம் "Officially Amazing" என அதிகாரப்பூர்வமாக வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.