

காசாவில் ஒரு வருடத்திற்கு முன்பு தல் அல்-ஹவா பகுதியில் நடந்த இஸ்ரேலியத் தாக்குதலில் சேதமடைந்த 6 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. கட்டிடம் இடிந்து விழுந்தபோது அதில் சுமார் 10 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலிய தாக்குதலால் பாதிக்கப்பட்ட அந்த கட்டிடம் இடிந்து விழுந்ததில் எட்டு குழந்தைகள் உட்பட 21 பேர் உயிரிழந்துள்ளனர். போரினால் சேதமடைந்த அந்த கட்டிடம் ஆபத்தான நிலையில் இருந்த போதிலும், போதிய மாற்று தங்குமிடங்கள் இல்லாததால் மக்கள் அங்கு வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
கட்டிடம் இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்பட்டதால், பல மணி நேரமாக மீட்புப் பணிகள் தொடர்கின்றன.
மேலும் மீட்புப் பணிகளுக்கு தேவையான கனரக இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் போதுமான அளவில் இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ஆரம்ப கட்டத்தில் மீட்புப் பணியாளர்கள் கைகளால் இடிபாடுகளை அகற்றி உயிர் பிழைத்தவர்களை தேடும் நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
காசாவில் இஸ்ரேலிய தாக்குதலுக்கு பிறகு சேதமடைந்த மேலும் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதாக ஐ.நா. அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக சுமார் 400 கட்டிடங்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பாதுகாப்பற்ற கட்டிடங்களில் வசிக்கும் மக்களுக்கு மாற்று தங்குமிடங்கள் மற்றும் மீட்புப் பணிகளுக்குத் தேவையான உபகரணங்களை வழங்க வேண்டும் என மனிதாபிமான நிவாரண ஒருங்கிணைப்பாளர் ரமிஸ் அலாக்பரோவ் வலியுறுத்தியுள்ளார்.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போரின்போது, காசாவில் உள்ள அனைத்துக் கட்டமைப்புகளிலும் சுமார் 80 சதவீதம் அழிக்கப்பட்டும் சேதமடைந்தும் உள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
காசாவிலிருந்து இதுவரை 19 லட்சத்திற்கும் அதிகமான மக்கள், அதாவது அப்பகுதியின் மக்கள் தொகையில் சுமார் 90 சதவீதம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
அவர்களில் பலர் பலமுறை இடம்பெயர்ந்துள்ளனர், மேலும் அவர்களில் 12 லட்சம் பேர் தற்காலிக முகாம்களில் வசித்து வருவதாக ஐ.நா தெரிவித்துள்ளது. போர் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட நிலையிலும் காசாவின் நிலைமை மோசமாக மாறியிருக்கிறது.