வங்காளதேச வன்முறை: பலி எண்ணிக்கை 105 ஆக உயர்வு - ஊரடங்கு அறிவிப்பு

ஆளும் ஷேக் ஹசீனா அரசாங்கத்துக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.ஜெயலில் இருந்து 100-க்கும் மேற்பட்ட கைதிக்ள தப்பி ஓடிவிட்டனர்.
வங்காளதேச வன்முறை: பலி எண்ணிக்கை 105 ஆக உயர்வு - ஊரடங்கு அறிவிப்பு
Published on

பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக கடந்த 1971-ல் நடந்த போரில் பங்கேற்ற வங்காளதேசத்தின் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த படைவீரர் இடஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருக்கிறது என மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

தலைநகர் டாக்காவில் உள்ள ஜஹாங்கீர் நகர் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்துக்கு ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி மாணவர்களை கலைத்தனர். இந்த வன்முறையில் 6 மாணவர்கள் உயிரிழந்தனர். போலீசார் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த போராட்டம் நாட்டின் பெரும்பாலான பகுதியில் பரவியுள்ளது. போராட்டக்காரர்கள் கண்ணில் பட்டதையெல்லாம் தாக்குவதோடு, தீ வைத்து எரித்து வருகிறார்கள். டாக்காவில் உள்ள BTV தொலைக்காட்சியின் தலைமையகத்துக்கு வெளியில் போலீசுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. BTV அலுவலகத்தின் வரவேற்பு கட்டிடத்துக்கும் பார்க்கிங்கில் நின்றிருந்த வாகனங்களுக்கும் போராட்டக்காரர்கள் தீவைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கட்டிடத்துக்குள்ளே பலர் சிக்கினர்.

வங்காளதேசத்தின் மத்திய பகுதியில் உள்ள நர்சிங்டி மாவட்டத்தில் உள்ள ஜெயிலுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதனை பயன்படுத்தி ஜெயலில் இருந்து 100-க்கும் மேற்பட்ட கைதிக்ள தப்பி ஓடிவிட்டனர். இதனைத்தொடர்ந்து அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டதாக தெரிகிறது. இதுபோன்று பல்வேறு இடங்களில் நடந்த போராட்டங்கள், கலவரங்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் காரணமாக ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 105 ஆக  உயர்ந்துள்ளது.

போராட்டம் காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை காலவரையின்றி மூட அரசு உத்தரவிட்டுள்ளது. பல்வேறு நகரங்களில் இணைய தள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. தலைநகரில் உள்ள மெட்ரோ நிலையங்கள் சேவையை நிறுத்தியுள்ளன.

போராட்டக்காரகள் மீது ரப்பர் குண்டுகளையும், ஒலியெழுப்பும் கிரைனைடுகளையும் போலீசார் உபயோகித்து வருகின்றனர். போராட்டம் தொடர்வதால் ஆளும் ஷேக் ஹசீனா அரசாங்கத்துக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர அரசு, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் போராட்டத்தை ஒடுக்க ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் வங்காளதேசத்தில் வசிக்கும் 15,000 இந்தியர்களும்பாதுகாப்பாக உள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவர்களை கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளதால் இந்திய மாணவர்கள் 300 பேர் பத்திரமாக நாடு திரும்பியுள்ளனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com