

இந்தியாவில் இருந்து குஜராத் ஹில்சா மீன்களை இறக்குமதி செய்வதை வங்காளதேச அரசு திடீரென அதிரடியாக நிறுத்தியுள்ளது.
இறக்குமதியாளர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த தடையில்லா சான்றிதழ்களில் 103 சான்றிதழ்களை அந்நாட்டு மீன்வளத்துறை ரத்து செய்து இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
உலகிலேயே அதிக அளவில் ஹில்சா மீனை உற்பத்தி செய்யும் நாடாக வங்கதேசம் விளங்கும் நிலையில், இந்தத் தலைகீழ் வர்த்தக நிறுத்த நடவடிக்கை சர்வதேச வர்த்தக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கமாக, துர்கா பூஜை காலத்தில் வங்கதேசத்தில் இருந்துதான் இந்தியாவுக்கு ஹில்சா மீன்கள் இறக்குமதி செய்யப்படும். ஆனால், இந்த ஆண்டு வங்கதேசத்தில் உள்நாட்டு ஹில்சா மீன் உற்பத்தி குறைந்ததாலும், விலை கிலோ 2,600 ரூபாய்க்கும் மேல் உயர்ந்ததாலும், கடந்த சில வாரங்களாக இந்தியாவில் இருந்து அங்கு ஹில்சா மீன் இறக்குமதி செய்யப்பட்டு வந்தது.
குஜராத்தின் பரூச் மற்றும் நர்மதா நதிப் பகுதிகளில் இருந்து பிடிக்கப்பட்ட ஹில்சா மீன்கள், பெட்ராபோல் மற்றும் பெனபோல் எல்லைத் துறைமுகங்கள் வழியாக வங்காளதேசத்துக்கு அனுப்பப்பட்டன.
கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் சுமார் 500 டன் ஹில்சா மீன்கள் இந்தியாவில் இருந்து வங்காளதேசத்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக மீன் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சூழலில், கடந்த செப்டம்பர் 23 அன்று வங்காளதேச மீன்வளத்துறையின் தற்காலிக இயக்குநர் ஜெனரல் டாக்டர் முகமது கலேத் கனக் வெளியிட்ட சுற்றறிக்கையின்படி, 103 இறக்குமதி உரிமங்கள் உடனடியாக ரத்து செய்யப்பட்டன.
வங்காளதேச மீன்வளத்துறை அதிகாரப்பூர்வமாக எவ்வித குறிப்பிட்ட காரணத்தையும் தெரிவிக்கவில்லை என்றாலும், வர்த்தக வட்டாரங்கள் சில முக்கியக் காரணங்களைக் குறிப்பிடுகின்றன.
குஜராத் ஹில்சா மீன்கள், வங்கதேசத்தின் புகழ்பெற்ற பத்மா நதி ஹில்சா மீன்களை விடச் சுவையிலும் தரத்திலும் சற்று மாறுபட்டவை.
இந்தியாவில் இருந்து குறைந்த விலைக்கு இறக்குமதி செய்யப்படும் இந்த மீன்களை, சில நேர்மையற்ற வியாபாரிகள் "உள்ளூர் பத்மா நதி மீன்" என்று கூறி ஏமாற்றி அதிக விலைக்கு விற்பனை செய்வதாகப் புகார்கள் எழுந்தன.
மீன் இறக்குமதியின் போது அதன் உண்மையான சந்தை மதிப்பை விடக் குறைவாகக் காட்டி, சட்டவிரோத பணப்பரிமாற்றங்கள் (ஹவாலா) நடப்பதைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.
வங்கதேச மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், உள்நாட்டு மீன் உற்பத்தியை ஊக்குவிக்கவும் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வங்கதேச அரசின் இந்தத் திடீர் முடிவால், எல்லையில் மீன்களை வாங்கிக் காத்திருந்த இறக்குமதியாளர்கள் கடுமையான நிதி இழப்பைச் சந்தித்துள்ளனர்.
இந்தியாவில் வாங்கி இருப்பு வைக்கப்பட்டிருந்த மீன்களை, தற்போது வேறு வழியின்றி மீண்டும் இந்தியச் சந்தையிலேயே மிகக் குறைந்த விலைக்கு மறுவிற்பனை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த அதிரடித் தடையால் வரவிருக்கும் துர்கா பூஜை பண்டிகையின் போது, வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு வர வேண்டிய புகழ்பெற்ற 'பத்மா நதி ஹில்சா' மீன்களின் வரத்தும் பாதிக்கப்படலாம் என மேற்கு வங்க மீன் இறக்குமதியாளர்கள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது