ஹாங்காங்கின் குவாய் சுங் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் பார்சல் வாங்கப்பட்ட சாத்தே பீஃப் நூடுல்ஸ் உணவிற்குள், உயிருடன் இருந்த எலிக்குட்டி ஒன்று கை, கால்களை அசைத்துக் கொண்டு கிடந்த சம்பவம் இணையத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான 18 வினாடிகள் கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் மிக வேகமாகப் பரவி வருகிறது.
மசாலா சாஸுக்குள் மூழ்கியிருக்கும் அந்தச் சிறிய எலிக்குட்டி உயிருடன் அசைவதைக் கண்டு நெட்டிசன்கள் பலரும் தங்களது கடுமையான கண்டனங்களையும், உணவுப் பாதுகாப்பு குறித்த அச்சத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
அப்பகுதியில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் பெண் ஒருவர், திங்கட்கிழமை மதியம் 12.50 மணியளவில் அங்கிருந்த 'வா ஜெர்' என்ற உணவகத்தில் மதிய உணவு ஆர்டர் செய்துள்ளார்.
சாத்தே பீஃப் நூடுல்ஸ், ஆம்லெட் மற்றும் ஒரு பானம் அடங்கிய இந்த உணவை 10 சதவீத தள்ளுபடியுடன் இந்திய மதிப்பில் ரூ. 530 -க்கு அவர் வாங்கியுள்ளார்.
அவர் உணவு பார்சல் வாங்கிக்கொண்டு தனது அலுவலகத்திற்குச் சென்று, சாப்பிடுவதற்காக அந்தப் பெட்டியைத் திறந்தபோதுதான் உள்ளே எலிக்குட்டி உயிருடன் நெளிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதுகுறித்து அவர் உடனடியாக உணவு மற்றும் சுற்றுச்சூழல் சுகாதாரத் துறையிடம் புகார் அளித்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து அந்த உணவகத்தின் உரிமையாளர் மைக் கூறும்போது, "இது மிகவும் பயங்கரமான மற்றும் மிகைப்படுத்தப்பட்ட ஒன்றாகத் தெரிகிறது. கடந்த ஓராண்டாக இந்த உணவகத்தை நடத்தி வருகிறோம்.
இதுவரை எலி அல்லது பூச்சிகள் உணவில் இருந்ததாக ஒரு புகார் கூட வந்தது இல்லை. இது ஒரு தொழிற்பேட்டை பகுதி என்பதால் எப்போதாவது வெளியில் எலிகள் நடமாடுவது உண்டு.
இருப்பினும், நாங்கள் மாதந்தோறும் ஆழமான துப்புரவு மற்றும் கிருமிநாசினி பணிகளைச் செய்து வருகிறோம்," என்று விளக்கமளித்தார்.
மேலும், இது யாரேனும் செய்த குறும்பா இருக்க வாய்ப்பில்லை என்றும், இனிவரும் நாட்களில் பூச்சிக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இணையத்தில் இந்தச் செய்தியைக் கண்ட நெட்டிசன்கள் சிலர், "நூடுல்ஸ் உடன் 'எலி சஷிமி' இலவசமாக வந்துள்ளது" என கிண்டலாகக் கமெண்ட் செய்து வருகின்றனர்.
பலரோ, இனிமேல் இந்த வகை உணவுகளை ஆர்டர் செய்யவே பயமாக இருக்கிறது எனத் தங்களது ஆதங்கத்தைப் பகிர்ந்து வருகின்றனர்.