கே.எஃப்.சி உணவகத்தில் பிறந்த குழந்தை - உரிமையாளரின் பெயரை வைத்த தாய்

இங்கிலாந்து மருத்துவமனையில் குழந்தைக்கு, கே.எஃப்.சி நிறுவனரை குறிப்பிடும் வகையில், ‘கர்னல் கோடி’ என்ற பெயர் வைக்கப்பட்டது.
KFC UK birth
Published on
Summary

இங்கிலாந்தில் உள்ள ஒரு கே.எஃப்.சி உணவகத்தில் நிறைமாத கர்ப்பிணி ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு குழந்தை பிறந்ததை அடுத்து, உணவகத்தில் பிறந்த குழந்தைக்கு கே.எஃப்.சி-யின் உரிமையாளர் பெயரை குழந்தையின் தாயார் சூட்டியுள்ளார்.

இங்கிலாந்தில் 33 வயது நிரைமாத கர்ப்பிணியான கேட்டி மர்ஃபி, தனது பிரசவத்திற்காக காலையில் அருகிலுள்ள மருத்துவமனைக்கு தனது கணவருடன் சென்றுள்ளார்.

அப்போது குழந்தை பிறப்பதற்கு இன்னும் நேரம் ஆகவில்லை என மருத்துவர்கள் கூறியதால், அவர்கள் மாலை 4 மணியளவில் வீடு திரும்பினர்.

இரவில் பிரசவ வலி

இதையடுத்து கர்ப்பிணிக்கு இரவு சுமார் 9 மணியளவில் திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அப்போது தனது மனைவியை காரில் ஏற்றிக் கொண்டு, அவரின் கணவர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அப்போது அவர்கள் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, கர்ப்பிணி தனது உடம்பில் ஏதோ ஒன்று நிகழ்வதை உணர்ந்துள்ளார். மேலும், அவர் தனக்கு குழந்தை பிறக்கப்போகிறது என்றும் தனது கணவரிடம் கூறியுள்ளார்.

கே.எஃப்.சி-யில் பிறந்த குழந்தை

இதன் காரணமாக அவரின் கணவர் வேறு வழியில்லாமல், சாலையின் ஓரமாக இருந்த ப்ரோம் ஸ்க்ரோ என்ற கே.எஃப்.சி உணவகத்தில் தனது வாகனத்தை பார்க்கிங் செய்துவிட்டு, மருத்துவமனை நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதையடுத்து காரின் முன் இருக்கைக்கு சென்ற கணவர், காரின் இருக்கையை மடித்துவிட்டு மனைவியை படுக்க வைத்துள்ளார். அப்போது இரவு 9:35 மணியளவில் காருக்குள் இருந்தபடியே கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.

இதைத்தொடர்ந்து ஐந்து நிமிடம் கழித்து கே.எஃப்.சி உணவகத்திற்கு ஆம்புலன்சில் வந்த மருத்துவமனை ஊழியர்கள், தாய் மற்றும் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

உரிமையாளரின் பெயரை வைத்த தாய்

மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட குழந்தைக்கு, கே.எஃப்.சி நிறுவனர் கர்னல் ஹார்லண்ட் சாண்டர்ஸை குறிப்பிடும் வகையில், ‘கர்னல் கோடி’ என்ற பெயரை தாயார் குழந்தைக்கு சூட்டினார்.

இதுகுறித்து குழந்தையின் தாயார் கூறுகையில், கோடி-யின் முதல் பிறந்தநாளில் அவனை கே.எஃப்.சி உணவகத்திற்கு அழைத்து செல்ல இருப்பதாகவும், அங்கே கேக்கை வெட்டி அவனது முதல் பிறந்தநாளை கொண்டாட உள்ளதாகவும் கூறினார்.

கே.எஃப்.சி நிறுவனம் வாழ்த்து

இந்த நிலையில் குழந்தை தங்கள் நிறுவன வளாகத்தில் பிறந்தது, தாங்கள் கெளரவமாக கருதுவதாக கே.எஃப்.சி உணவகம் தெரிவித்துள்ளது.

மேலும், பிறந்த குழந்தைக்கு தாங்கள் கே.எஃப்.சி-யின் பொருட்கள் மற்றும் வவுச்சர்களை அனுப்பியுள்ளதாகவும்; அந்த குழந்தை மீண்டும் தங்கள் உணவகத்திற்கு வருவதை வரவேற்க காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com