

மியாமி சர்வதேச விமான நிலையத்தில் அமேசான் சரக்கு விமானம் ஒன்று ஓடுபாதையை விட்டு வெளியேறி, வாகனங்கள் மீது மோதி தீப்பிடித்து எரிந்ததில் ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
புவேர்ட்டோ ரிக்கோவின் சான் ஜுவானில் இருந்து வந்த இந்த விமானம், பிற்பகல் 2 மணியளவில் ஓடுபாதையை தாண்டி சென்றது. இதில் ஐந்து பேர் உயிரிழந்தனர்; மூன்று பேர் ஆபத்தான நிலையில் காயமடைந்தனர்; மேலும் இருவர் குறைவான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்று மியாமி-டேட் கவுண்டி அதிகாரிகள் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்கள் விமானத்தில் இருந்தவர்களா அல்லது விமானம் மோதிய வாகனங்களில் இருந்தவர்களா என்பதை தீர்மானிக்க இது மிக ஆரம்பக்கட்ட நிலை என்று மியாமி அதிகாரிகள் தெரிவித்தனர்.
வானத்தில் அடர்ந்த கரும்புகை எழும்பிய இந்த விபத்தில், விமானி மற்றும் துணை விமானி ஆகியோர் விமானத்தின் கட்டுப்பாட்டு அறையிலும் (cockpit), சில பயணிகள் கார்களிலும் சிக்கிக்கொண்டதாக மியாமி-டேட் தீயணைப்பு மற்றும் மீட்புப் படைத் தலைவர் ரே ஜடல்லா கூறினார். மேலும் ஒருவர் வாகனத்தின் அடியில் சிக்கியிருந்ததாகவும் அந்த அமைப்பு தெரிவித்தது.
இந்த விபத்து காரணமாக, பரபரப்பான போக்குவரத்து மையமாக திகழும் இந்த விமான நிலையத்தில் பிற்பகல் முழுவதும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. விபத்து நடந்து பல மணிநேரங்களுக்கு பிறகும், விமானத்தில் ஏற்பட்ட எரிபொருள் கசிவை சரிசெய்யும் பணியில் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டிருந்ததாக ஜடல்லா கூறினார்.
விபத்துக்குள்ளான 'பிரைம் ஏர்' விமானம், இரண்டு பெரிய சரக்கு லாரிகளுக்கு அருகில் உள்ள சாலையோரத்தில் நின்றது; விபத்து நடந்த இடத்தில் இருந்து வெளியான படங்கள் இதனை உறுதிப்படுத்தின. விமானம் அதன் அடிப்பகுதியால் தரையில் அமர்ந்த நிலையில் காணப்பட்டது; தீ விபத்து ஏற்பட்ட போதிலும், விமானத்தின் கட்டமைப்பு பெரும்பாலும் சேதமடையாமல் இருந்தது.
இந்த விமானத்தை வட கரோலினாவைச் சேர்ந்த சரக்கு போக்குவரத்து நிறுவனமான '21 ஏர்' இயக்கி வந்தது. 'ஃப்ளைட்ரேடார்24' (Flightradar24) என்ற விமான போக்குவரத்து கண்காணிப்பு இணையதளத்தின் தகவலின்படி, 32 ஆண்டுகள் பழமையான இந்த போயிங் 767 விமானம், முதலில் பயணிகள் விமானமாக உருவாக்கப்பட்டது. இது இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக பல்வேறு விமான நிறுவனங்களுக்காக இயக்கப்பட்ட பிறகு, 2015-இல் சரக்கு விமானமாக மாற்றப்பட்டது.
விமான போக்குவரத்து இடையூறுகளை கண்காணிக்கும் இணையதளமான 'ஃப்ளைட் அவேர்' (FlightAware) தகவலின்படி, இந்த சம்பவம் காரணமாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகலில் இந்த விமான நிலையத்தில் சுமார் 250 விமானங்கள் தாமதமாயின.
இது குறித்து விசாரிக்க, தலைவர் ஜெனிபர் ஹோமெண்டி தலைமையிலான குழுவை மியாமிக்கு அனுப்புவதாக தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB) தெரிவித்துள்ளது.