VIDEO- ஹெலிகாப்டரில் இருந்து இறங்கும்போது கைக்குழந்தையுடன் தடுமாறிய அமெரிக்க 'செகண்ட் லேடி'- பாதுகாப்பு அதிகாரிகள் உதவாதது ஏன்?

இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Usha Vance
Published on: 
Summary

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸின் மனைவியும், அந்நாட்டின் ‘இரண்டாம் பெண்மணி’ என்று அழைக்கப்படுபவருமான உஷா வான்ஸ், மேரிலாந்தில் உள்ள 'ஜாயிண்ட் பேஸ் ஆண்ட்ரூஸ்' ராணுவ தளத்தில் ஹெலிகாப்டரிலிருந்து கீழே இறங்கும்போது எதிர்பாராதவிதமாக கால் தடுமாறி விழப் பார்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க துணை அதிபர் குடும்பத்தினர் அலாஸ்காவிற்குப் பயணம் மேற்கொள்வதற்காக ஹெலிகாப்டரில் வந்து இறங்கினர். அப்போது, உஷா வான்ஸ் தனது 9 வாரமே ஆன கைக்குழந்தை அலெக் நீல் வான்ஸை உடலோடு இணைத்து கட்டும் பையில் சுமந்தபடியும், மற்றொரு கையில் பெரிய பையை ஏந்தியபடியும் ஹெலிகாப்டர் படிகளில் கீழே இறங்கினார்.

திடீரென கடைசிப் படிகளில் இறங்கும்போது உஷா நிலைதடுமாறி கீழே விழச் சென்றார். எனினும், மிக விரைவாகச் செயல்பட்டு பக்கவாட்டில் இருந்த கைப்பிடியை இறுக்கமாகப் பிடித்து, குழந்தைக்கு எந்தவித ஆபத்தும் நேரிடாதவாறு தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டார்.

உதவ முன்வராத பாதுகாப்புப் படையினர்

இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், உஷா வான்ஸ் குழந்தையுடன் தடுமாறி கீழே விழப் பார்த்தபோதிலும், அங்கு நின்றிருந்த ராணுவ அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் யாரும் உடனடியாக ஓடிவந்து அவருக்கு உதவவில்லை என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாதுகாப்புப் படை அதிகாரிகளின் இந்த மெத்தனப் போக்கையும், அருகில் இருந்த அதிபர் மாளிகைப் பணியாளர்களின் செயலற்ற தன்மையையும் இணையவாசிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

"ஒரு தாய் கைக்குழந்தையுடன் விழப் போகும்போதுக்கூட கைக் கட்டி வேடிக்கை பார்ப்பதா?" என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இருப்பினும், அரசு சார்ந்த முறைசார் வரவேற்புகளின் போது, பாதுகாப்பு வீரர்கள் தங்களது நிலையிலிருந்து நகரக்கூடாது என்ற ராணுவ விதிகளின் காரணமாகவே அவர்கள் உடனடியாக உதவ முன்வரவில்லை என்றும் கூறப்படுகிறது.

அலாஸ்கா பிரசார பயணம்

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, தான் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவித்த உஷா வான்ஸ், தனது குடும்பத்தினருடன் திட்டமிட்டபடி அலாஸ்காவிற்குப் புறப்பட்டுச் சென்றார். குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் செனட்டர் டான் சுல்லிவனுக்கு ஆதரவாகப் பிரசாரம் மேற்கொள்வதற்காக ஜே.டி.வான்ஸ் தனது குடும்பத்தினருடன் இந்த நீண்ட தூரப் பயணத்தை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com