

மியான்மரின் சக்திவாய்ந்த கிளர்ச்சி குழு கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில், சந்தை ஒன்றிற்கு அருகே அந்நாட்டு ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் குறைந்தது 33 பேர் கொல்லப்பட்டனர்; மேலும் 36 பேர் காயமடைந்தனர் என்று அக்குழுவும் மீட்புப் பணி அதிகாரி ஒருவரும் தெரிவித்தனர்.
நாட்டின் மேற்கு பகுதியான ராகைன் மாநிலத்தில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல், ஜனநாயகம் கோரும் எதிர்ப்பு படைகள் மற்றும் இன ஆயுத குழுக்களுக்கு எதிராக நாடு முழுவதும் நடத்தப்பட்டு வரும் தொடர்ச்சியான கொடிய வான்வழி தாக்குதல்களில் மிக சமீபத்தியதாகும்.
பிப்ரவரி 1, 2021 அன்று ஆங் சான் சூ கியின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திடம் இருந்து ராணுவம் அதிகாரத்தை கைப்பற்றியதில் இருந்து மியான்மர் கொந்தளிப்பான சூழலில் உள்ளது; இச்செயல் பரவலான எதிர்ப்பை தூண்டியது. அமைதியான போராட்டங்களை பாதுகாப்பு படைகள் கொடிய வன்முறை மூலம் ஒடுக்கிய பிறகு, ராணுவ ஆட்சிக்கு எதிரான பலர் ஆயுதங்களை ஏந்தினர், இதனால் நாட்டின் பெரும்பகுதி மோதல் சூழலில் சிக்கியது.
ராகைன் பகுதியை சேர்ந்த சக்திவாய்ந்த இன ஆயுத குழுவான 'அரக்கன் ராணுவம்' வெளியிட்ட தகவலின்படி, நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மண்டலேக்கு மேற்கே சுமார் 340 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கியாவ்க்டாவ் நகரில் இந்த தாக்குதல் நடைபெற்றது.
கியாவ்க்டாவ் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள இக்குழுவின் கூற்றுப்படி, நண்பகல் நேரத்தில் போர் விமானம் ஒன்று உள்ளூர் சந்தைக்கு அருகே இரண்டு குண்டுகளை வீசியதில், வியாபாரிகள், பொருட்கள் வாங்க வந்தவர்கள் மற்றும் பாதசாரிகள் உட்பட 33 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 36 பேர் காயமடைந்துள்ளதாகவும், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் அக்குழு எச்சரித்தது.
சம்பவ இடத்தில் இருந்த மீட்புப் பணியாளர்களின் தகவலை மேற்கோள் காட்டி, ராகைனின் மூத்த மீட்புப் பணி அதிகாரியான வாய் ஹன் ஆங் (Wai Hun Aung), உயிரிழப்புகள் மற்றும் காயமடைந்தோர் குறித்த விவரங்களை 'அசோசியேட்டட் பிரஸ்' (AP) செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தினார். அந்தச் சந்தை அப்பகுதியின் முக்கிய மொத்த விற்பனை மையமாகத் திகழ்வதாகவும், மாநிலம் முழுவதிலுமிருந்து வர்த்தகர்களும் வாடிக்கையாளர்களும் அங்கு வருவதாகவும் அவர் கூறினார்.
"ராகைன் மாநிலத்தில் நடத்தப்பட்ட மிகக் கடுமையான வான்வழித் தாக்குதல்களில் இதுவும் ஒன்று," என்று அவர் கூறினார்.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகளில், கட்டிடங்கள் தீப்பற்றி எரிவதும், வாகனங்கள் சேதமடைந்திருப்பதும், அருகிலுள்ள பாலத்தின் சில பகுதிகள் அழிந்திருப்பதும் காணப்பட்டன.